
காற்று சுத்திகரிப்பான்கள் உண்மையில் நுரையீரல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறதா? நிபுணர்கள் சொல்வதைக் கேளுங்க
செய்தி முன்னோட்டம்
நுரையீரல் புற்றுநோய் உலகளவில் புற்றுநோய் இறப்புகளுக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு காற்று மாசுபாடு ஒரு முக்கிய காரணியாகும். குறிப்பாக, நுண்ணிய துகள்கள் (PM2.5), நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் பிற நச்சு மாசுக்களால் ஏற்படும் காற்று மாசுபாடு நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. உலக சுகாதார நிறுவனம் (WHO) இந்த துகள்களை புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக வகைப்படுத்தியுள்ளது. அதிக மாசுபாடு உள்ள நகரங்களில் புகைப்பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான மக்கள் தங்கள் நேரத்தை வீட்டுக்குள்ளேயே செலவிடுவதால், வீட்டின் உட்புற காற்றின் தரம் முக்கியமானது.
காற்று சுத்திகரிப்பான்கள்
காற்று சுத்திகரிப்பான்கள் எவ்வாறு செயல்படுகின்றன?
காற்று சுத்திகரிப்பான்கள் இந்த அபாயத்தைக் குறைக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். HEPA (High-Efficiency Particulate Air) வடிகட்டிகளைக் கொண்ட சுத்திகரிப்பான்கள், PM2.5, தூசி, மகரந்தம் போன்ற 99% துகள்களை உறிஞ்சும் திறன் கொண்டவை. சில மேம்பட்ட மாடல்கள், புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடைய ஆவியாகும் கரிம சேர்மங்களை (VOCs) உறிஞ்சும் கரி வடிகட்டிகளையும் பயன்படுத்துகின்றன. தொடர்ச்சியாக சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துவதால், உட்புற PM2.5 அளவை 50-80% குறைக்க முடியும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
புற்றுநோய்
காற்று சுத்திகரிப்பான்கள் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்குமா?
இந்த குறைப்பு நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும், காற்று சுத்திகரிப்பான்கள் நுரையீரல் புற்றுநோயின் அபாயத்தை முழுமையாக நீக்குவதில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வெளிப்புற மாசுபாடு, தொழில் அபாயங்கள், இரண்டாவது புகை (second-hand smoke) மற்றும் மரபணு காரணிகளும் முக்கிய பங்களிப்பாளர்கள் என்று அவர்கள் கூறுகின்றனர். எனவே, புகைபிடி தவிர்ப்பது, காற்றின் தரக் குறியீட்டை (AQI) கண்காணிப்பது, சரியான காற்றோட்டத்தை உறுதி செய்வது, மற்றும் அதிக மாசுபாடு உள்ள நேரங்களில் முகக்கவசம் அணிவது போன்ற பல தடுப்பு உத்திகளின் ஒரு பகுதியாகவே காற்று சுத்திகரிப்பான்களைப் பார்க்க வேண்டும். இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை மட்டுமே நுரையீரல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.