ஆரோக்கியமான செரிமானத்திற்கு தினமும் செய்ய வேண்டிய 5 யோகாசனங்கள்!
செய்தி முன்னோட்டம்
யோகா பயிற்சி என்பது உடலுக்கு மட்டுமல்லாமல், மனதிற்கும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான ஆரோக்கியத்திற்கும் அளப்பரிய நன்மைகளை வாரி வழங்கக்கூடியதாகும். யோகாசனங்கள் உடலின் பல்வேறு உறுப்புகளை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவற்றிற்குத் தேவையான தளர்வையும் அளிக்கின்றன. இவற்றுள் சில குறிப்பிட்ட ஆசனங்கள், நமது செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளைத் தூண்டி, அதனைச் சீராக இயக்கப் பெரிதும் உதவுகின்றன. நமது வயிற்றுப் பகுதியை ஆரோக்கியமாக வைத்திருந்து, செரிமானத் திறனை மேம்படுத்தும் அத்தகைய 5 எளிய யோகாசனங்களைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காண்போம்.
#1
அர்த்த மத்ஸ்யேந்திராசனம்
அர்த்த மத்ஸ்யேந்திராசனம் செய்வதற்கு, முதலில் கால்களை நேராக நீட்டி நிமிர்ந்து அமர வேண்டும். பின்னர், இடது காலை மடித்து அதன் குதிகாலை வலது இடுப்புக்குக் கீழேயும், வலது காலை எடுத்து இடது முழங்காலுக்கு வெளியேயும் ஊன்றி வைக்க வேண்டும். தொடர்ந்து, இடது கையால் வலது கணுக்காலைப் பிடிக்க முயற்சி செய்து, வலது கையை இடுப்புக்குப் பின்னால் தரையில் வைத்துக் கொள்ள வேண்டும். சில நொடிகள் இதே நிலையில் நீடித்திருந்து விட்டு, பின்னர் மெதுவாக உடலைத் தளர்த்தி இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்த ஆசனம் வயிற்றுப் பகுதித் தசைகளை நன்கு வலுப்படுத்துவதோடு, செரிமான மண்டலத்தையும் சீராகச் செயல்பட வைக்கிறது.
#2
பாலாசனம்
பாலாசனம் செய்வதற்கு, முதலில் வஜ்ராசன நிலையில் அமர்ந்து, மூச்சை உள்ளிழுத்தவாறே இரு கைகளையும் மேல்நோக்கி உயர்த்த வேண்டும். பின்னர், மூச்சை வெளிவிட்டபடியே மெதுவாக முன்னோக்கித் குனிந்து, நெற்றியைத் தரையில் பதிய வைக்க வேண்டும். இந்த நிலையில் இரு கைகளும் முன்னோக்கி நீட்டப்பட்டிருக்க வேண்டும்; மார்புப்பகுதி தொடைகளின் மீது ஓய்வாக அமர்ந்திருக்க வேண்டும். சில நொடிகள் இயல்பான மூச்சோட்டத்துடன் இதே நிலையிலேயே நீடித்திருக்க வேண்டும். அதன் பின்பு, மீண்டும் மூச்சை மெதுவாக உள்ளிழுத்தவாறே ஆரம்ப நிலைக்குத் (வஜ்ராசனம்) திரும்ப வேண்டும். இந்த ஆசனம் வயிற்றுப் பகுதி உறுப்புகளுக்கு நல்ல ஓய்வைத் தந்து, செரிமானத்தை ஊக்குவிப்பதோடு மன அழுத்தத்தையும் பெருமளவு குறைக்கிறது.
#3
விபரீத கரணி ஆசனம்
விபரீத கரணி ஆசனம் செய்வதற்கு, முதலில் தரைவிரிப்பில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், கைகளைத் தரையில் ஊன்றி, இரு கால்களையும் மெதுவாக மேல்நோக்கி உயர்த்த வேண்டும். இந்தநிலையில் உங்களது இரு கால்களும், கால் விரல்களும் நேராக மேல்நோக்கி இருக்க வேண்டும்; உடலின் கீழ்ப்பகுதி தரையுடன் 90 டிகிரி கோணத்தை உருவாக்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். உங்களது கைகளை இடுப்பு அல்லது முதுகுப் பகுதிக்குக் கொடுத்துத் தாங்கிக் கொள்ளலாம் அல்லது கைகளைத் தரையில் நீட்டி வைத்திருக்கலாம். இந்தநிலையில் 1 முதல் 2 நிமிடங்கள் வரை சாதாரண மூச்சோட்டத்துடன் நீடித்திருந்து, பின்னர் மெதுவாகக் கால்களை இறக்கி இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும்.
#4
சேதுபந்தாசனம்
சேதுபந்தாசனம் செய்வதற்கு, முதலில் தரைவிரிப்பில் மல்லாந்து நேராகப் படுத்து, கால்களை நேராகவும் சாதாரணமாகவும் நீட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், இரு கால்களையும் முழங்காலளவில் மடித்து, இரண்டு கைகளையும் கணுக்கால்களுக்கு அல்லது குதிகால்களுக்கு அருகில் கொண்டு வர வேண்டும். அதன் பிறகு, கைகளையும் தோள்களையும் தரையில் ஊன்றி, மெதுவாக உங்களது இடுப்பு மற்றும் முதுகுப் பகுதியை மேல்நோக்கி உயர்த்த வேண்டும். சில நொடிகள் சாதாரண மூச்சோட்டத்துடன் இதே பால நிலையிலேயே நீடித்திருந்து, பின்னர் மெதுவாக உடலைத் தளர்த்தி ஆரம்ப நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்த ஆசனம் வயிற்றுப் பகுதி உறுப்புகளை நன்கு வலுப்படுத்துவதோடு, செரிமானத் திறனை மேம்படுத்தவும் பெரிதும் உதவுகிறது.
#5
பவனமுத்தாசனம்
பவனமுத்தாசனம் செய்வதற்கு, முதலில் தரைவிரிப்பில் மல்லாந்து நேராகப் படுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், இரு கால்களையும் முழங்காலளவில் மடித்து, மெதுவாக நெஞ்சு அல்லது மார்புப் பகுதிக்கு அருகில் கொண்டு வர வேண்டும். இப்பொழுது, இரு கைகளாலும் முழங்கால்களைக் கட்டியணைத்து, கைகளின் விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, மெதுவாகத் தலை மற்றும் தோள்களைத் தரையிலிருந்து உயர்த்தி, உங்களது மூக்கினை இரு முழங்கால்களுக்கு நடுவில் வைக்க முயற்சி செய்ய வேண்டும். சில நொடிகள் சாதாரண மூச்சோட்டத்துடன் இதே நிலையில் நீடித்திருந்து, பின்னர் மெதுவாகத் தலையையும் கால்களையும் தளர்த்தி இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். இப்பாசனம் வயிற்றில் தேங்கியுள்ள தேவையற்ற வாயுத் தொல்லையை நீக்குவதோடு, செரிமான மண்டலத்தைச் சீராக்கவும் உதவுகிறது.