கல்லீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் 5 நிமிடம் ஒதுக்குங்கள்! எளிய உடற்பயிற்சி முறைகள்!
செய்தி முன்னோட்டம்
கல்லீரல் ஆரோக்கியம் என்று வரும்போது பலரும் எண்ணெய் உணவுகளைக் குறைப்பது மற்றும் மதுவைத் தவிர்ப்பது ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். ஆனால், உடற்பயிற்சி என்பது கல்லீரலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் கல்லீரல் கொழுப்பு நோய் பாதிப்பைக் குறைக்க முறையான உடற்பயிற்சி அவசியம் என Journal of Clinical Medicine ஆய்விதழ் குறிப்பிட்டுள்ளது.
உடற்பயிற்சி செய்தல்
உடற்பயிற்சி முறை
வேகமான நடைப்பயிற்சி: உங்கள் அறையிலோ அல்லது பால்கனியிலோ 2 முதல் 3 நிமிடங்கள் வேகமாக நடக்கவும். இது நடைப்பயிற்சியை மேற்கொள்வது கல்லீரலில் தேவையற்ற கொழுப்புப் படிவதைத் தடுக்கிறது. கபாலபதி பிராணாயாமம்: வசதியாக அமர்ந்து, மூச்சை வேகமாக வெளியே விடவும். இந்தப் பயிற்சி கல்லீரல் உள்ள உறுப்புகளைத் தூண்டுகிறது. இது செரிமானம் மற்றும் நச்சு நீக்கச் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. புஜங்காசனம்: குப்புறபடுத்து, உள்ளங்கைகளைத் தோள்பட்டைக்குக் கீழே வைத்து, மேல் உடலை மெதுவாக உயர்த்தவும். இது வயிற்றுபகுதியை நீட்டிப்பதன் மூலம் கல்லீரலுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. பவனமுக்தாசனம்: மல்லாக்கப் படுத்து, முழங்கால்களை மார்போடு அணைத்தபடி பிடித்துக் கொள்ளவும். இது செரிமானத்திற்கு உதவுவதோடு, வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அழுத்தத்தைக் குறைத்து கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
ஏன் இந்தப் பயிற்சிகள் அவசியம்?
நச்சு நீக்கம்
வழக்கமான உடற்பயிற்சி இன்சுலின் உணர்திறனை (Insulin Sensitivity) மேம்படுத்தி, கல்லீரலில் கொழுப்பு சேமிக்கப்படுவதைக் குறைக்கிறது. சீரான ரத்த ஓட்டம் கல்லீரலின் நச்சு நீக்கும் திறனை அதிகரிக்கிறது. ஐரோப்பிய கல்லீரல் ஆய்வுக் கழகம் (EASL), கல்லீரல் கொழுப்புப் பாதிப்பு உள்ளவர்கள் வாரத்திற்கு 150-200 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்யப் பரிந்துரைக்கிறது. தீவிரமான உடற்பயிற்சிகளை விட, தினமும் 5-10 நிமிடங்கள் மேற்கொள்ளும் இத்தகைய எளிய முறைகளே கல்லீரலுக்கு மிகுந்த நன்மைகளைத் தரும். இதனுடன் போதிய தண்ணீர் குடித்தல், சரிவிகித உணவு மற்றும் போதுமான தூக்கம் ஆகியவற்றைப் பின்பற்றினால் கல்லீரல் நோய்களைத் தள்ளிப்போடலாம்.