மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்கான 5 வாழ்க்கை முறை மாற்றங்கள்
நாம் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்போது, வாழ்க்கையின் மகிழ்ச்சியை அனுபவிக்கவும், நமது ஆர்வங்களைத் தீவிரமாகப் பின்தொடரவும், நமது அபிலாஷைகளை அடையவும் நாம் சிறந்த முறையில் தயாராகிறோம். அதுவே உடலில் சிறிது அசௌகரியம் தோன்றினாலும், நாம் சுணங்கி விடுவோம். நமது வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் , நமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, மனமகிழ்ச்சியை அதிகரிக்கலாம். மேலும் நமது அன்றாட வாழ்வின் அர்த்தத்தையும், நோக்கத்தையும் கண்டறியலாம். மகிழ்ச்சியான மற்றும் நீண்ட ஆயுளை வாழ சில குறிப்புகள் இதோ:
உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றவும்
உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றுவது, உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் போன்ற முழு உணவுகளையும் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட மற்றும் குப்பை உணவுகளை உட்கொள்வதைக் குறைக்கவும். சிறிய தட்டுகளைப் பயன்படுத்தி உங்கள் உணவை உண்பதன் மூலம், உணவின் அளவை கட்டுப்படுத்தலாம். காலப்போக்கில் இந்த சிறிய மற்றும் நிலையான மாற்றங்கள் பெரும் தாக்கத்தை உருவாக்கும்.
மன அழுத்தத்தை நேருக்கு நேர் எதிர்கொள்ளுங்கள்
வாழ்க்கை, மன அழுத்தங்களால் நிறைந்தது என்பதையும், அவற்றை முழுமையாக நீக்க முடியாது என்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். நாம் செய்யக்கூடியது, மன அழுத்தத்தை நாம் உணரும் விதத்தை மாற்றுவதுதான். மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலையின் எதிர்மறையான அம்சங்களைப் பற்றி சிந்திக்காமல், அதிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய நேர்மறையான விளைவுகள் அல்லது பாடங்களில் கவனம் செலுத்த முயற்சிக்கவும். மன அழுத்தம் சில நேரங்களில் உங்கள் இலக்குகளை அடைய உங்களை ஊக்குவிக்கும் என்பதை உணருங்கள்.
இயற்கையில் அதிக நேரம் செலவிடுங்கள் மற்றும் சரியான உறக்கத்தை பெறுங்கள்
உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்காக, இயற்கையோடு ஒன்றி வாழ பழகிக்கொள்ளுங்கள். பறவைகளின் பாடலைக் கேட்பது, வண்டுகளின் ரீங்காரத்தை கேட்பது, இயற்கையான காடுகளின் வாசத்தை நுகருவது போன்ற இயற்கையோடு இணைவதற்கு உங்கள் புலன்களைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள். இரவில் நிறைய தூங்குங்கள்: நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க நிறைய தூக்கம் அவசியம். தூக்கமின்மை, மனநிலை, அறிவாற்றல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை எதிர்மறையாக பாதிக்கும். ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெற , நிலையான உறக்க அட்டவணையை கடைபிடித்து, நிம்மதியான தூக்க சூழலை உருவாக்கவும். காஃபின், நிகோடின் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
சோம்பேறித்தனமான வாழ்க்கை முறையை மாற்றவும்
தற்போது உள்ள சூழலில், நமது அன்றாட வேலைகள் பலவும், உட்கார்ந்த நிலையிலேயே செய்வது போல மாறிவிட்டது. அதை மாற்றுங்கள். உங்கள் மதிய உணவு இடைவேளையின் போது ஒரு சிறிய நடைப்பயிற்சி அல்லது டிவி பார்த்துக்கொண்டிருக்கும் போது சிறிது உடற்பயிற்சி செய்வது போன்ற சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை நாள்தோறும் செய்யத்தொடங்குங்கள். காலப்போக்கில் உங்கள் உடற்பயிற்சி நேரத்தை படிப்படியாக அதிகரிக்கவும். இதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை திரும்ப பெறலாம்