Loading...
பெங்களூரில் Zepto நிறுவனத்தின் கிடங்கு பூட்டி சீல்: கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை
பெங்களூரில் Zepto நிறுவனத்தின் கிடங்குக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத்துறை

பெங்களூரில் Zepto நிறுவனத்தின் கிடங்கு பூட்டி சீல்: கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Aug 12, 2026
09:50 am

செய்தி முன்னோட்டம்

உணவு பொருட்களைச் சேமித்து வைப்பதிலும், லேபிளிடுதல் மற்றும் கையாளுதலிலும் விதிகளை மீறியதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், கர்நாடக மாநில உணவுப் பாதுகாப்புத் துறையின் சிறப்பு ஆய்வுக் குழு பெங்களூரு ஹொஸ்கோடே பகுதியில் செயல்பட்டு வந்த பிரபல ஜெப்டோ நிறுவனத்தின் கிடங்கை பூட்டி சீல் வைத்துள்ளது. அரசு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையின் இந்நடவடிக்கை குறித்துப் பேசிய Zepto நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், "அதிகாரிகளின் வழக்கமான ஆய்வுகளின் போது முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சுட்டிக்காட்டியுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் குறைகளை நிவர்த்தி செய்யவும், உணவுப் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.

வழிகாட்டுதல்கள்

உணவு விநியோகத் துறைக்கு 11 அம்ச வழிகாட்டுதல்கள்

இந்த சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை, மாநிலம் முழுவதும் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் தாபாகளுக்கான 11 அம்சக் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

காலாவதியான உணவுகளை உடனடியாக கழிப்பது, -18°C வெப்பநிலையில் உறைந்த உணவுகளைப் பராமரிப்பது மற்றும் சைவம், அசைவ உணவுகளுக்கு தனித்தனி வெட்டுப் பலகைகளைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சமையலுக்குப் பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்குக் கடும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், கழிவு எண்ணெய்களை அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் மட்டுமே அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், உணவுப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் தூய்மையாகவும், குறிப்பிட்ட வெப்பநிலையை பராமரிக்கும் வசதியுடனும் இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

ஹோட்டல்களுக்கு எச்சரிக்கை

அனைத்து உணவகங்களிலும் வாடிக்கையாளர்களுக்குத் தூய்மையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளை இலவசமாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 11 அம்சப் பாதுகாப்பு விதிகளை மீறும் நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.

ADVERTISEMENT