இந்த ஆட்சியின் கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் வாசித்தார். பொது தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருப்பதால், இடைக்கால பட்ஜெட் மட்டுமே தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய ஆட்சியின் கடைசி பட்ஜெட் இதுவாகும். வரவிருக்கும் பொது தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறுமோ, அந்த கட்சி விரிவான பட்ஜெட்டை ஜூன் மாதத்தில் தாக்கல் செய்யும். எனினும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி கட்சிகள் தான் மீண்டும் வெற்றி பெறும் என்று பேசப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் என்பதால், பெரிய கொள்கை மாற்றங்கள் மற்றும் பெரிய அறிவிப்புகள் இல்லாமல் போகலாம். ஆனால் எதிர்பார்ப்புகள் என்னமோ அதிகமாகவே உள்ளன.
'இந்தியப் பொருளாதாரம் இந்த ஆண்டு ஏழு சதவீதத்திற்கும் மேலாக வளரும்'
இருப்பினும், நடுத்தர வர்க்கத்தினரிடையே வருமான வரி அடுக்குகளில் திருத்தம் செய்யப்படும் என்ற நம்பிக்கையும், வேலை உருவாக்கத்தை அதிகரிக்க அரசாங்கம் ஏதாவது செய்யும் என்ற ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் உள்ளது. பட்ஜெட்டை வழங்குவதற்காக எழுந்து பேசிய நிர்மலா சீதாராமன், இந்தியப் பொருளாதாரம் இந்த ஆண்டு ஏழு சதவீதத்திற்கும் மேலாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், கடந்த தசாப்தத்தில் அது ஆழமான மாற்றத்தை கண்டுள்ளது என்றும் கூறினார். இனி வரும் காலங்களில், இந்தியாவின் வளர்ச்சியை அதிகரிக்க, ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய நான்கு குழுக்களில் மோடி அரசாங்கம் கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த பாரதமாக மாற்றும் நோக்கில் நரேந்திர மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.