அதிமுக கொடி, சின்னம், பெயரை பயன்படுத்த மாட்டேன் - ஓபிஎஸ் உறுதி
செய்தி முன்னோட்டம்
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்தி அறிக்கைகள் வெளியிடுவது, பொதுக்கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
இது தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தி வருவதால், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களின் இந்த செயல்பாடுகளுக்கு தடை விதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போதைய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இவ்வழக்கு மீதான விசாரணை கடந்த 7ம்.,தேதி சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி சதீஷ்குமார் முன்னர் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 'கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் இது குறித்த பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்'என்று ஓபிஎஸ் தரப்பில் கோரப்பட்டது.
வழக்கு
வழக்கின் விசாரணை டிசம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு
இதற்கு 'எத்தனை முறை கால அவகாசம் கேட்பீர்கள்?எத்தனை முறை வழக்கு தொடர்வீர்கள்?' என்று சரமாரியான கேள்விகளை எழுப்பிய நீதிபதி அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் உள்ளிட்ட அனைத்தையும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பயன்படுத்தக்கூடாது என்று இடைக்கால தடை உத்தரவினை பிறப்பித்திருந்தார்.
இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை இன்று(நவ.,30)மீண்டும் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
அப்போது இடைக்கால தடை உத்தரவுப்படி அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடிகள், லெட்டர் பேட், உள்ளிட்டவற்றை பயன்படுத்த போவதில்லை என்று ஓபிஎஸ் தரப்பில் உறுதியான உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்த உத்தரவாதத்தினை அவர்கள் மீறினால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகும்படி எடப்பாடி பழனிச்சாமி தரப்பிற்கு அறிவுறுத்திய நீதிபதி, வழக்கினை டிசம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.