'பழிவாங்காமல் விடமாட்டோம்': கதுவா பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய அரசு கண்டனம்
நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அந்த தாக்குதலுக்கு பழி வாங்காமல் விடமாட்டோம் என பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அரமனே இன்று தெரிவித்துள்ளார். "ஐந்து துணிச்சலான இதயங்களை இழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்... தேசத்திற்கான அவர்களின் தன்னலமற்ற சேவை எப்போதும் நினைவுகூரப்படும். அவர்களின் தியாகத்திற்கு நாங்கள் பழிவாங்கியே தீருவோம். அந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள தீய சக்திகளை இந்தியா வீழ்த்தும்" என்று அரமனே கூறினார். நேற்று கதுவாவின் மச்செடி பகுதியில் ரோந்துக் குழுவினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜூனியர் கமிஷன்ட் ஆபீசர் உட்பட ஐந்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், மேலும் ஆறு பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட குழு பொறுப்பேற்றுள்ளது
நேற்று பிற்பகல் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் மற்றும் துப்பாக்கிகளால் இராணுவ டிரக்கை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பின்னர் அருகில் உள்ள காட்டுக்குள் தப்பிச் சென்றனர். அவர்களைக் கண்டுபிடித்து பிடிப்பதற்காக அதிகாரிகள் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட குழுவான காஷ்மீர் டைகர்ஸ், தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது (JeM) இன் கிளை அமைப்பாகும். இந்த அமைப்பு நேற்று நடத்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்குள் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். "நான் ஆழ்ந்த வேதனையடைகிறேன்... அன்பிற்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்" என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.