இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம்: காங்கிரஸை வழி நடத்துகிறார் சோனியா காந்தி
மக்களவையில் இன்று மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தின் போது, காங்கிரஸ் கட்சியை அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி வழி நடத்த இருக்கிறார். மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும், நாரி சக்தி வந்தான் ஆதினியம் என்ற மசோதாவை நேற்று அரசு அறிமுகப்படுத்தியது. மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் 2008ஆம் ஆண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்தியது. அது 2010இல் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இந்த மசோதாவை மக்களவைவில் அப்போது அறிமுகப்படுத்த முடியவில்லை. 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இரண்டு மக்களவைத் தேர்தல்களுக்கும் முன்னதாக பாஜக அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் இந்த மசோதாவும் இடம்பெற்றிருந்தது.
இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது விவாதம்
இந்திய ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த மசோதாவை இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வலியுறுத்தினார். "'இந்த மசோதாவை சட்டமாக்குவதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம் என்று தேசத்தின் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்." என்று பிரதமர் மோடி நேற்று கூறினார். இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும் இந்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. பாஜக சார்பில் விவாதம் நடத்தும் பேச்சாளர்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, பார்தி பவார், அபராஜித் சாரங்கி, சுனிதா துக்கல், தியா குமாரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.