கேரளாவில் இருந்து புறப்பட்டது முதல் பெண்கள் ஹஜ் விமானம்
செய்தி முன்னோட்டம்
கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹஜ் பயணமானது இந்தியாவில் இந்தாண்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் பயணத்தினை மேற்கொள்வதாகும்.
அதன்படி அவர்கள் சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று(ஜூன்.,8) மாலை 6.45 மணியளவில் கேரளா மாநிலம் காலிகட் சர்வதேச விமான நிலையத்திலிருந்து முதன்முறையாக பெண்கள் மட்டும் பயணிக்கும் ஹஜ் விமானம் ஜெட்டா நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளது.
ஐ.எக்ஸ்.3025 என்னும் எண் கொண்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் 145 பெண் யாத்ரீகர்கள் மற்றும் 6 பெண் ஊழியர்களோடு புறப்பட்டு சென்றுள்ளது என்று கூறப்படுகிறது.
ஹஜ்
மேலும் 16 மகளிர் மட்டும் விமானங்கள் இயக்கப்படும்
முதன்முறையாக ஆண்கள் துணை இல்லாமல் இஸ்லாமிய பெண்கள் மட்டுமே பயணிக்கும் இந்த விமானத்தினை சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சர் ஜான் பர்லா கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார்.
அதன் பின்னர் பேசிய அவர், "பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் கொள்கையின் முக்கிய நிகழ்வாக இந்த விமானம் இயக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
பெண்கள் மட்டும் பயணிக்கும் இந்த விமானத்தினை பெண் விமானிகளான கன்னிகா மெஹ்ரா மற்றும் கரிமா பஸ்ஸி ஆகியோர் இயக்கினர்.
இதனை தொடர்ந்து, இந்த மகளிர் மட்டும் விமானம் போல மேலும் 16 விமானங்கள் கேரளாவில் இருந்து இயக்கப்படவுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கேரளாவில் இருந்து மட்டும் இந்தாண்டு 45 வயதுக்கு மேற்பட்ட 2,733 பெண்கள் ஆண் துணையின்றி ஹஜ் பயணம் மேற்கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.