நீண்ட காலமாக லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணுக்கு, பிரிந்த பிறகு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: நீதிமன்றம்
கணவன்-மனைவியாக நீண்ட காலம் ஆணுடன் லிவ் இன் ரிலேஷன் வாழும் பெண், சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், பிரிந்து செல்லும் போது பெண்ணுக்கு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு என மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிபதி ஜே.எஸ். அலுவாலியா தலைமையிலான பெஞ்ச், 38 வயதான ஒருவரின் மனுவைத் தள்ளுபடி செய்து, அவருடன் வாழ்ந்த பெண்ணுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 1,500ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த கருத்தை தெரிவித்தது. மனுதாரர் ஷைலேஷ் போப்சே, 48-வயதான அனிதா போப்சேவுடன் வசித்து வந்தார். அந்த தம்பதியருக்கு ஒரு குழந்தையும் இருந்தது. அவர்கள் கோவிலில் திருமணம் செய்திருந்தால் அதை நிரூபிக்க முடியாது என்று கூறி அனிதாவுக்கு உதவித்தொகை வழங்க மறுத்து போப்சே ட்ரையல் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார்.
லிவ்-இன் உறவிற்கும் ஜீவனாம்சம் பெறலாம்
"விசாரணை நீதிமன்றம், விண்ணப்பதாரரின் சட்டப்பூர்வ திருமணமான மனைவி அல்ல என்று ஒரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பை வழங்கவில்லை. ஆனால், பிரதிவாதியால் சடங்குகள் மற்றும் கோவிலில் திருமணம் நடந்தது என்பதை நிரூபிக்க முடியவில்லை". "பின்னர் விசாரணை நீதிமன்றம், விண்ணப்பதாரரும், பிரதிவாதியும் நீண்ட காலமாக கணவன்-மனைவியாக வாழ்ந்து வருவதால், பிரதிவாதி ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருப்பதால், பிரதிவாதி ஜீவனாம்சத்திற்கு தகுதியானவர்" என்று விசாரணை நீதிமன்றம் கூறியது. CrPc இன் பிரிவு 125படி போதுமான வசதியுள்ள ஒருவர், தன்னைப் பராமரிக்க முடியாத தனது மனைவியைப் பராமரிக்க மறுத்தால், அத்தகைய நபர் மாதாந்திர உதவித்தொகையைச் சட்டப்படி தர வேண்டும் என்று கூறுகிறது.