டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் நாடாளுமன்றத்தில் 'SIR' குறித்து விவாதம் நடைபெறும்
செய்தி முன்னோட்டம்
இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகளின் தொடர் வலியுறுத்தலை அடுத்து, வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) குறித்த விவாதம், டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த கால அட்டவணை முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு, SIR விவாதம் குறித்து அரசு தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
பின்னணி
விவாதத்திற்கான பின்னணி
வாக்காளர் பட்டியலை திருத்தும் பணியான SIR-ல் உள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள், வாக்காளர் பெயர்களை தன்னிச்சையாக நீக்குதல், மற்றும் பூத் லெவல் அதிகாரிகளின் (BLO) பணிச்சுமை மற்றும் மரணங்கள் ஆகியவை குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்த விவாதம் குறித்து மத்திய அரசு உறுதி அளிக்காததால், கடந்த நாட்களில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் பலமுறை பாதிக்கப்பட்டன.
விவரங்கள்
விவாதத்தின் விவரங்கள்
வாக்காளர் சீர்திருத்தங்கள் குறித்த விரிவான விவாதம் டிசம்பர் 9 மற்றும் 10, 2025 ஆகிய தேதிகளில் லோக்சபாவில் நடைபெறும். இந்த விவாதத்திற்காக 10 மணிநேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு குறித்த சிறப்பு விவாதம் நடைபெறும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவாதத்தின் மூலம், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் உள்ள பிரச்னைகள் மற்றும் வாக்காளர் பதிவு சீர்திருத்தங்கள் குறித்து ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே ஒரு விரிவான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.