'சனாதனம் குறித்து தொடர்ந்து பேசுவோம்' - உதயநிதி ஸ்டாலின் ஆவேச பேச்சு
சென்னையில் கடந்த 1ம் தேதி நடைபெற்ற 'சனாதன ஒழிப்பு மாநாடு' நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் அவர் பேசிய கருத்துக்கள் ஓர் பேசுபொருளாக மாறியது. இந்நிலையில், இன்று(செப்.,10) நெய்வேலியில் நடந்த திமுக எம்.எல்.ஏ.ராஜேந்திரன் இல்ல திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அதில் பேசிய அவர், "சனாதனம் குறித்து நான் பேசியது ஒருநாள் செய்தி தான். ஆனால் அதனை திரித்து பொய்யான செய்தியாக பரப்பி இந்தியா முழுவதும் அதுகுறித்து பேச வைத்து விட்டார்கள்" என்று கூறினார். தொடர்ந்து, சனாதனம் குறித்து இப்பொழுது இல்லை கடந்த 100 ஆண்டுகளாக பேசி வருகிறோம் என்றும், இன்னும் 200 ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து பேசுவோம் என்றும் கூறியுள்ளார்.
ஆட்சியே போனாலும் கவலையில்லை - உதயநிதி
மேலும் அவர், "திமுக தொடங்கியதே சனாதனத்தை ஒழிக்கத்தான், அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, பெரியார், கலைஞர் உள்ளிட்டோர் பேசாததை ஒன்றும் நான் பேசிவிடவில்லை. அதனால் சனாதனத்தை ஒழிக்க ஆட்சியே போனாலும் கவலையில்லை" என்று ஆவேசமாக பேசினார் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஜி20 மாநாடு நடப்பதையொட்டி டெல்லியில் இருந்த குடிசைகளை திரையிட்டு மறைத்தது தான் மத்திய அரசின் சாதனை என்றும், இந்தியாவை மாற்றுவதாக கூறிய பிரதமர் மோடியால் தற்போது 'இந்தியா' என்னும் பெயரை தான் மாற்றமுடிந்தது என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து அவர், "சாலை மற்றும் காப்பீடு திட்டங்களில் மத்திய அரசு ஊழல் செய்துள்ளது. பாஜக செய்த ஊழல்கள் வெளிவருவதால் தான் என் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள்" என்றும் கூறியதாக தெரிகிறது.