Page Loader
தமிழகத்தில் மின்கட்டணம் எதற்காக உயர்த்தப்பட்டது? அதன் பின்னணி என்ன?
கட்டண உயர்வு 1 கோடி பொதுமக்களை பாதிக்காது என தெரிவித்துள்ளது

தமிழகத்தில் மின்கட்டணம் எதற்காக உயர்த்தப்பட்டது? அதன் பின்னணி என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 16, 2024
11:42 am

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும், இந்த கட்டண உயர்வு ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என நேற்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பும் அதிருப்தி கிளம்பியுள்ளதால், இதுதொடர்பான விளக்கத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) வழங்கியுள்ளது. இந்த கட்டண உயர்வு தமிழகத்தின் 1 கோடி பொதுமக்களை பாதிக்காது என தெரிவித்துள்ளது. மேலும், சிறிய அளவே கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக அந்த விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் கட்டணம்

எதற்காக மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது?

பணவீக்க விகித அடிப்படையில் தமிழகத்தில் மின்கட்டணத்தை ஆண்டுதோறும் மாற்றியமைக்க கடந்த 2022-ஆம் ஆண்டு ஒப்புதல் அளித்திருந்தது மின்சார ஒழுங்குமுறை ஆணையம். இந்த மாற்றம் ஆண்டுதோறும், ஜூலை 1-ஆம் தேதி செயல்படுத்தப்படும் என்றும், 2026-27 வரை இந்த மாற்றம் ஆண்டுதோறும் நிகழும் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே இந்த மின் கட்டண உயர்வு நிகழ்ந்துள்ளது. இந்த ஆண்டு மின்கட்டணம் 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு அறிக்கை

எதிர்கட்சி ஆட்சியை குறை கூறிய TANGEDCO 

இது தொடர்பான விளக்க அறிக்கையையும் TANGEDCO வெளியிட்டுள்ளது: கடந்த 2011-12 ஆண்டில் ரூ.18,957 கோடியாக இருந்த TANGEDCO-வின் ஒட்டு மொத்த நிதி இழப்பானது, கடந்த 10 ஆண்டுகளில் மேலும் அதிகரித்து, ரூ.96,712 கோடி ஆக உள்ளது. எனினும், நிதி இழப்பினை 2021-22 ஆம் ஆண்டிலிருந்து 100% முழுமையாக தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும் என்ற தற்போதைய தமிழக அரசின் உறுதிப்பாட்டை போல, முந்தைய காலத்தில் எவ்வித உறுதிப்பாடும் வழங்காத காரணத்தினால், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது என அதிமுக ஆட்சியை குறை கூறியது அந்த அறிக்கை.

வங்கி கடன்

நிதி இழப்பை சமாளிக்க வங்கி கடன்

தமிழக மின்வாரியத்தில் கடந்த 2011-12ம் ஆண்டில் ரூ.43,493 கோடியாக இருந்த கடன் தொகையானது கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்து (2021-22) வரை ரூ.1,59,823 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால், அதன் மீதான வட்டியும் 259% அதிகரித்துள்ளது. எனவே அரசிற்கு நிதி சுமை அதிகரித்தது. எனவே நிதி இழப்பை, இந்த அரசானது நுகர்வோருக்கு பெரும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஆண்டு தோறும் சிறிய அளவில் மின் கட்டண உயர்வை அமுல்படுத்தி வருகிறது. அதோடு, மத்திய அரசின் வழி காட்டுதல்களின் படி, விநியோக முறையை வலுப்படுத்தும் (RDSS) திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசின் நிதியை பெறுவதற்காக, ஆண்டுதோறும் மின் கட்டணம் திருத்தம் செய்வது கட்டாயமாகிறது எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

மின் கட்டண சதவீதம்

வரையறுக்கப்பட்ட அளவை விட குறைந்த அளவே உயர்த்தப்பட்ட மின் கட்டணம்

அந்த அறிக்கையின் படி, TANGEDCO 6 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்த அனுமதி இருந்தும், பொதுமக்களின் நன்மையை கருத்தில் கொண்டு, சென்ற ஆண்டு 2.18 சதவீதம் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதே போல, இந்த ஆண்டும் குறைந்த சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.