வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; வரம்பற்ற அதிகாரத்திற்கு கட்டுப்பாடு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்திய ரயில்வே மற்றும் ஆயுதப் படைகளுக்கு அடுத்தபடியாக நாட்டின் மூன்றாவது பெரிய நில உரிமையாளரான வக்ஃப் வாரியத்தின் வரம்பற்ற அதிகாரங்களைக் கட்டுப்படுத்த வக்ஃப் சட்டத்தை மாற்றியமைக்க உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் உயர்மட்டக் கூட்டத்தில், இந்த சட்டத்தில் மொத்தம் 40 திருத்தங்கள் மேற்கொள்வதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, புதிய மசோதா பாராளுமன்றத்தில் இன்னும் சில தினங்களில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க வகை செய்யும் சட்டத்திருத்தம்
முன்மொழியப்பட்ட திருத்தங்களின்படி, வக்ஃப் வாரியத்தால் உரிமைகோரப்படும் அனைத்து சொத்துக்களும் கட்டாயமாக சரிபார்க்கப்படும். தற்போது, இதுபோன்ற சரிபார்ப்பு நடைமுறை எதுவும் இல்லாத நிலையில், வக்ஃப் வாரியம் எந்தவொரு சொத்தையும் உரிமைகோர முடியும். இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் கூடுதலாக, வக்ஃப் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பதை உறுதி செய்யவும் அரசு ஆலோசித்து வருகிறது. இந்த புதிய சட்டத் திருத்தங்கள் மூலம் மத்திய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் பெண்களுக்கு 2 இடங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வக்ஃப் சொத்துக்கள் மூலம் ஆண்டுக்கு ரூ. 200 கோடி வருவாய் ஈட்டப்படும் ஈட்டப்படும் நிலையில், அவற்றையும் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வக்ஃப் வாரியம் குறித்த அடிப்படைத் தகவல்கள்
1954 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்டது. வக்ஃப் என்பது மத மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக கடவுளின் பெயரில் வழங்கப்படும் சொத்து. சட்ட அடிப்படையில், வக்ஃப் சட்டத்தின் பிரிவு 3 "வக்ஃப் என்பது முஸ்லீம் சட்டத்தால் பக்தி, மதம் அல்லது தொண்டு என்று அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நோக்கத்திற்காகவும் எந்தவொரு அசையும் அல்லது அசையாச் சொத்தையும் நிரந்தரமாக அர்ப்பணிப்பதாகும்" என்று கூறுகிறது. வக்ஃப் சொத்துக்கள் மூலம் கிடைக்கும் வருமானம் பொதுவாக கல்வி நிறுவனங்கள், கல்லறைகள், மசூதிகள் மற்றும் தங்குமிடங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஷரியா சட்டத்தின்படி, வக்ஃப் நிறுவப்பட்டதும், சொத்து வக்ஃபுக்கு அர்ப்பணிக்கப்பட்டால், அது எப்போதும் வக்ஃப் சொத்தாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.