மும்பையில் உள்ள ஸ்டோருக்கு ரூ.1 கோடி வாடகை செலுத்திய ஆப்பிள், ஏன்?
ஆப்பிள் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் (BKC) இந்தியாவின் தங்களது முதல் ஸ்டோரை திறந்தது. BKC-யில் உள்ள ஜியோ வேர்ல்டு டிரைவின் மேற்கு நுழைவாயிலிலேயே தங்களது ஸ்டோரை அமைத்திருக்கிறது ஆப்பிள். தங்களது ஜியோ வேர்ல்டு டிரைவ் மாலில் அமைக்கப்பட்டுள்ள ஆப்பிளின் இந்த ஒரு ஸ்டோரின் மூலம் மட்டும் ரூ.1 கோடிக்கு மேலான வருவாயைப் பெறுகிறார் முகேஷ் அம்பானி, எப்படி? ஜியோ வேர்ல்டு டிரைவ் மாலில் அமைக்கப்பட்டுள்ள 20,800 சதுரடி ஸ்டோரை 11 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது ஆப்பிள். இந்த ஸ்டோருக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.42 லட்சம் வாடகையும், முதல் மூன்று வருடங்களுக்கு இந்த ஸ்டோரின் மூலம் ஆப்பிள் பெறும் வருவாயில் 2%-மும் செலுத்த வேண்டும்.
ஆப்பிள் ஸ்டோருக்கு வழங்கப்பட்டிருக்கும் தனித்துவ வசதி:
ஆப்பிளின் ஸ்டோருக்கு தனித்துவமான வசதி ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. அந்த ஸ்டோரைச் சுற்றியுள்ள இடங்களில், அந்நிறுவனத்தின் போட்டியாளர்களான கூகுள், மைக்ரோசாஃப்ட் உட்பட 22 நிறுவனங்களும், அவற்றின் விளம்பரங்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. ஆப்பிள் அந்த ஸ்டோருக்கு அளிக்கும் குறைந்தபட்ச வாடகையாக ரூ.42 லட்சம் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மட்டுமே. அதன்பிறகு ஒவ்வொரு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை 15% வாடகையை உயர்த்தி அளிக்க வேண்டும். அதேபோல், மூன்றாண்டுகளுக்குப் பிறகு அந்நிறுவனத்தின் வருவாயில் 2.5%-தத்தையும் சேர்த்து அளிக்க வேண்டும். இந்த ஸ்டோரில் முதல் ஒரு மாதத்தில் மட்டும் ரூ.25 கோடிக்கு தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்திருக்கிறது ஆப்பிள். அப்படியென்றால், ரூ.42 லட்சம் வாடகையுடன், 2% வருவாயான ரூ.50 லட்சம் சேர்த்து முதல் மாதத்திற்கு மட்டும் ரூ.92 லட்சத்தை செலுத்தியிருக்கிறது ஆப்பிள்.