உத்தர்காசி சுரங்கப்பாதை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அர்னால்ட் டிக்ஸ்; யார் அவர்?
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிலத்தடி நிபுணரான பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ், உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். நீங்கள் இணையத்தில் இந்த விபத்து சார்ந்து வெளியான பல காணொளிகளில் அவரை கண்டிருப்பீர்கள். அவர் வெளிநாட்டுக்காரர் என பார்த்ததும் தெரிந்து இருக்கும். ஆனால் உண்மையில் அவர் யார்? அவரின் பின்னணி என்ன? அவரின் நிபுணத்துவம் மாற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
மீட்பு குழுக்களின் ஆலோசனையாளர், டிக்ஸ்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில், சில்க்யாரா சுரங்கப்பாதையின் இரண்டு கிமீ நீளம் கட்டப்பட்ட பகுதியில், 13 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை வெளியேற்றுவதற்காக மொத்தம் ஐந்து ஏஜென்சிகள் - ONGC, SJVNL, RVNL, NHIDCL மற்றும் THDCL-க்கு குறிப்பிட்ட பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சர்வதேச சுரங்கப்பாதை மற்றும் நிலத்தடி விண்வெளி சங்கத்தின், ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட அர்னால்ட் டிக்ஸ், இந்த மீட்புக்குழுவினருக்கு ஆலோசனைகள் வழங்கும் நிபுணர்களில் ஒருவர். பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் நிலத்தடி மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பில் நிபுணத்துவம் பெற்றவர். அவர் நிலத்தடி கட்டுமானத்துடன் தொடர்புடைய அபாயங்கள் பற்றிய ஆலோசனைகளையும் வழங்குகிறார் மற்றும் நிலத்தடி சுரங்கப்பாதையில், உலகின் முன்னணி நிபுணராக பரவலாக அங்கீகரிக்கப்படுகிறார்.
வழக்கறிஞர், பேராசிரியர் டிக்ஸ்
டிக்ஸ் பெற்றுள்ள விருதுகளின் பட்டியலை பார்க்கும்போது, உலகளவில் சுரங்கப்பாதை பாதுகாப்பிற்கு அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பை பிரதிபலிக்கிறது. 2011 ஆம் ஆண்டில், சுரங்கப்பாதையில் சிறந்து விளங்கியதற்காக, குறிப்பாக சுரங்கப்பாதை தீ பாதுகாப்புக்காக ஆலன் நெய்லாண்ட் ஆஸ்ட்ரேலேஷியன் டன்னலிங் சொசைட்டியின் இரு ஆண்டு விருதைப் பெற்றார். அதுமட்டுமின்றி, டிக்ஸ், ஒரு பாரிஸ்டர். அதாவது வழக்கறிஞர். பிரிட்டிஷ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்வெஸ்டிகேட்டர்ஸில் உறுப்பினராக உள்ளார். அவர் உலகின் அனைத்து கண்டங்களிலும் பணிபுரிந்துள்ளார். எக்ஸ்பர்ட் அண்டர்கிரவுண்ட் ஒர்க்ஸ் சேம்பர்ஸ் உறுப்பினர், விக்டோரியன் பார் உறுப்பினர் மற்றும் டோக்கியோ நகர பல்கலைக்கழகத்தில் பொறியியல் (சுரங்கங்கள்) வருகை பேராசிரியராக உள்ளார்.