புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருக்கும் ஃபூக்கோவின் ஊசல் எதற்காக நிறுவப்பட்டது
புது டெல்லியில் புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் நிறுவப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தின் 'அரசியலமைப்பு கேலரி' பிரிவில் ஃபூக்கோ ஊசல் என்னும் அறிவியல் சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள்(NCSM) மூலம் இந்த ஊசல் வடிவமைத்து நிறுவப்பட்டது. ஆனால், ஃபூக்கோ ஊசல் என்றால் என்ன? அதை எதற்காக புதிய நாடாளுமன்றத்தில் நிறுவி இருக்கிறார்கள் தெரியுமா? ஃபூக்கோ ஊசல் என்பது ஒரு வசீகரிக்கும் அறிவியல் கருவியாகும். இந்த கருவியில் ஒரு கனமான குண்டு கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்டிருக்கும். அதனால், இந்த குண்டால் எந்த திசையில் வேண்டுமானாலும் ஊசலாட முடியும். பூமியின் மேற்பரப்பு எந்த திசையிக்கு செல்கிறதோ அதே திசைக்கு இந்த குண்டும் செல்லும் என்று பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுகிறது.
ஃபூக்கோ ஊசல் எப்படி வேலை செய்கிறது?
1851 இல், பிரெஞ்சு இயற்பியலாளர் ஜீன்-பெர்னார்ட்-லியோன் ஃபூக்கோ இந்த ஊசலை பாரிஸில் முதன்முதலாக உருவாக்கினார். இந்த ஊசலை ஒரு பக்கமாக இழுத்து விடுவிப்பதன் மூலம், கயிற்றில் தொங்கி கொண்டிருக்கும் குண்டு ஃபூக்கோ ஊசலின் மேற்பரப்பில் தானாகவே ஊசலாட தொடங்கும். பூமி அதன் அச்சில் எப்படி சுழன்று கொண்டிருக்கிறதோ அதே திசையில் இந்த ஊசலும் சுழலும் என்பதுதான் இதன் தனி சிறப்பு. பிரிட்டானிக்கா அறிக்கையின்படி, ஃபூக்கோ ஊசல் என்பது ஒரு குறிப்பிட்டமேற்பரப்பில் முன்னும் பின்னுமாக ஊசலாடும் ஒரு கண்கவர் கருவியாகும். இருப்பினும், பூமி அதன் அடியில் சுழல்வதால், பூமிக்கும் அந்த கனமான குண்டிற்கும் இடையே ஒரு ஒப்பீட்டு இயக்கத்தை இந்த கருவி உருவாக்குகிறது.