கேப்டன் அன்ஷுமன் சிங்கின் பெற்றோர் மாற்ற விரும்பும் ஆயுதப் படைகளில் உள்ள 'Next of Kin' விதிகள் என்ன?
சென்றாண்டு, சியாச்சினில் மரித்துப்போன,கேப்டன் அன்ஷுமன் சிங், கடந்த வாரம் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த அமைதிக்கால வீர விருதான கீர்த்தி சக்ரா பெற்றார். ஜனாதிபதி திரௌபதி முர்மு கையால் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதினை பெற்ற பெற்ற சில நாட்களுக்குப் பிறகு, சிங்கின் பெற்றோர்கள் இந்திய இராணுவத்தின் 'Next of Kin'(NOK) கொள்கையில் மாற்றங்களைச் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அளவுகோலை 'தவறானது' என்று அழைத்த அனுஷுமனின் தந்தை ரவி பிரதாப் சிங், தங்கள் மகனின் மறைவுக்குப் பிறகு, அவரது விதவை மனைவி ஸ்மிருதி சிங் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என்றும், தற்போது மகனின் உரிமையின் பெரும்பகுதியைப் அவர் மட்டுமே பெறுகிறார் என்றும் கூறி வருத்தப்பட்டார்.
ராணுவத்தில் செயல்பாட்டில் இருக்கும் NOK விதிகள் கூறுவது என்ன?
ராணுவ வீரர் ஒருவர் இறந்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதியுதவி அளிப்பதை இந்தக் கொள்கை உள்ளடக்குகிறது. அடுத்த உறவினர், அதாவது Next of kin என்ற சொல், ஒரு நபரின் மனைவி, நெருங்கிய உறவினர்கள், குடும்ப உறுப்பினர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரைக் குறிக்கிறது. திருமணம் ஆகாத ராணுவ வீரராக இருந்தால், அவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் (கார்டியன்), NOK என பட்டியலிடப்படுவார்கள். இதுவே அவருக்கு திருமணம் ஆகிவிட்டால், அவர்களது பெற்றோரை விட அவர்களது மனைவியின் பெயர் NOK பட்டியலில் முன் சேர்க்கப்படும். இதனால் ராணுவ சேவையின் போது தனிநபருக்கு ஏதாவது நேர்ந்தால், இழப்பீட்டுத் தொகை NOK க்கு வழங்கப்படும் என்று விதிகள் கூறுகின்றன.
இந்த விதிகளில் மாற்றம் வேண்டும் என்கிறார் அன்ஷுமனின் தந்தை
இந்த NOK விதிகளில் தான் தற்போது மாற்றங்கள் கொண்டு வரவேண்டும் என்கிறார் ராணுவ வீரரின் தந்தை ரவி பிரதாப் சிங்கும் அவரது மனைவி மஞ்சு சிங்கும். அவர்களின் கூற்றுப்படி, தங்கள் மகனின் மறைவுக்குப் பிறகு, அவர்களின் மருமகள் ஸ்மிருதி சிங் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என்றும், தற்போது பெரும்பான்மையான உரிமைகளைப் அவரே பெறுகிறார் என்றும் கூறியுள்ளனர். தங்களிடம் மகனின் நினைவாக ஒரு புகைப்படம் மட்டுமே எஞ்சியுள்ளது எனத்தெரிவித்தனர். டிவி9 பாரத்வர்ஷிடம் பேசிய தந்தை சிங், "NOK க்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல் சரியானது அல்ல. இது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடமும் பேசியுள்ளேன். அன்ஷுமானின் மனைவி இப்போது எங்களுடன் வசிக்கவில்லை. திருமணமாகி ஐந்து மாதங்களே ஆகின்றன, குழந்தை இல்லை" என்றார்.
தியாகியின் குடும்பத்தாருக்கு பிரிக்கவேண்டிய பங்கு பங்கு குறித்து விளக்கம் வேண்டும்
"அதனால்தான் NOKஇன் வரையறை சரி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். தியாகியின் மனைவி குடும்பத்தில் தங்கினால், யாருக்கு எவ்வளவு பங்கு இருக்கிறது என்பதை முடிவு செய்ய வேண்டும், "என்று அவர் மேலும் கூறினார். மற்ற பெற்றோர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக NOK விதிகளை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேப்டன் சிங்கின் தாயார் கூறினார். "திருமணத்திற்குப் பிறகு, அவர் என் மகளுடன் நொய்டாவில் தங்கத் தொடங்கினார். ஜூலை 19, 2023 அன்று, அன்ஷுமானின் மரணம் குறித்த தகவல் கிடைத்ததும், நான் அவர்களை லக்னோவுக்கு அழைத்தேன்" என்று அன்ஷுமானின் தந்தை இந்தியா டுடேயிடம் கூறினார். "ஆனால் இறுதி சடங்கிற்குபிறகு, அவர் (ஸ்மிருதி) மீண்டும் குர்தாஸ்பூருக்கு சென்றுவிட்டார்" என்று அவர் கூறினார்.