தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மோக்கா புயல், நேற்று மாலை 5:30 மணியளவில் தீவிர புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் வடக்கு திசையில் பயணித்து இன்று(மே 12) காலை 5:30 மணியளவில் அதிதீவிர புயலாக மாறியது. இந்த அதிதீவிர புயல் மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், போர்ட் ப்ளேயருக்கு மேற்கு-வடமேற்கு திசையில் 530 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேலும் வலுப்பெற்று மே 14ஆம் தேதி அன்று வங்காளதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
இது கரையை கடக்கும் போது, மணிக்கு 150-160 கிமீ வேகத்தில் காற்று வீசுக்ககூடும். மே 14ஆம் தேதி வரை மீனவர்கள் மற்றும் பயணிகள் மத்திய/வடகிழக்கு வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது. மே-12 இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மே-13 முதல் மே-16 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.