மோக்கா புயல்: மே 14ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் திங்கள்கிழமை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தற்போது அந்தமானுக்கு தென்மேற்கே சுமார் 530 கிலோ மீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(மே 11) காலை தீவிர புயலாக மாறி, அதன் பிறகு, நாளை நள்ளிரவு மிகத்தீவிர புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல், மே 13ஆம் தேதி அன்று சற்றே வலுகுறைந்து வட-வடமேற்கு திசையில் திரும்ப கூடும். அதனையடுத்து, மே 14ஆம் தேதி அன்று இந்த மோக்கா புயல் வங்காளதேசம்-மியான்மர் கடற்கரையை கடக்கும்.
தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு
மோக்கா புயல் வலுப்பெற இருப்பதை அடுத்து, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. மே-10 தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மே-11 முதல் மே-14 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸாகவும் இருக்கும்.