
வாக்காளர் பட்டியலின் திருத்த பணிகள் - இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள்
செய்தி முன்னோட்டம்
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்படி ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் துவங்கி டிசம்பர் மாதம் வரை வாக்காளர்கள் பட்டியலின் திருத்த பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதன்படி 3 மாதத்திற்கு ஒருமுறை பெயர் சேர்த்தல் பணிகள் நடத்தப்படுகிறது.
இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலானது கடந்த 27ம் தேதி வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியதாக கூறப்படுகிறது.
அன்றைய தினத்திலிருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவைகளுக்கு நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டது.
அதேபோல், 2024ம் ஆண்டு ஜனவரி.,1ம் தேதி 18 வயது நிறைவடையும் நபர்களும் தங்கள் பெயரினை வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது.
விண்ணப்பம்
ஒருவாரத்தில் 36,142 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தகவல்
கடந்த ஒரு வார காலமாக இப்பணிகள் நடந்து வரும் நிலையில், அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறுகையில், 'முதன்முறை வாக்காளர்களின் விண்ணப்பங்கள் அதிகளவு பெறப்பட்டுள்ளது' என்றும்,
'அதனை தவிர்த்து, கடந்த ஒருவார காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்த பணிகளுக்காக 36,142 விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், மக்களின் ஆர்வத்தினை இது காட்டுகிறது' என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர், தமிழ்நாடு முழுவதுமுள்ள 31 வாக்குச்சாவடி மையங்களில் செயல்படும் 68 ஆயிரத்துக்கும் மேலான வாக்குச்சாவடிகளில் முகவரி மாற்றம், பெயர் நீக்குதல், சேர்த்தல் உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் இன்றும்(நவ.,4), நாளையும்(நவ.,5) நடக்கவுள்ளது என்பதையும் தெரிவித்தார்.