நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம்
நெல்லை பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்காக தேர்தல் பணப்பட்டுவாடா செய்வதற்காக ரூ. 4 கோடி எடுத்து சென்ற விவகாரத்தில் இருவர் கைதான நிலையில், இந்த விவகாரம் தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில், முதற்கட்ட தேர்தலுக்கு முன்னதாக சில நாட்களுக்கு முன்பு, நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. அதனை கொண்டு சென்ற மூவரும் கைது செய்யப்பட்டு, காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நயினார் நாகேந்திரனுக்கு நேற்று தாம்பரம் போலீஸார் இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளனர்.
"அந்தப் பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை":நயினார் நாகேந்திரன்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தேர்தல் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.4 கோடி பணத்துக்கும், தனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என மறுத்துள்ளார். "மே 2-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் கொடுத்துள்ளனர். முழுக்க முழுக்க என்னை குறிவைத்து செயல்படுகின்றனர். இதனை அரசியல் சூழ்ச்சியாகவே பார்க்கிறேன். தமிழகத்தில் ரூ.200 கோடிக்கு மேல் கைப்பற்றியுள்ளார்கள். ஆனால், ரூ.4 கோடியை யாரோ எங்கோ கொண்டு சென்றதில் எனது பெயரையும் சேர்த்து சூழ்ச்சி செய்கின்றனர்" என்றார். "கைதான 3 பேர் மட்டுமல்ல, இதில் தொடர்புடைய நிறைய பேர் எனக்கு தெரிந்தவர்கள், எனது சொந்தக்காரர்கள் தான். யாரையும் இதில் குறை சொல்ல விரும்பவில்லை. காவல்துறை தன் கடமையை செய்கிறது. அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை"என்றார்.