ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு
கடந்த 2014ம் ஆண்டு ஆந்திரா, தெலுங்கானா என்று இரண்டு மாநிலங்களாக ஆந்திர பிரதசம் பிரிந்தது. அப்பொழுது ஐதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக விளங்கும் என்றும், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ஆந்திரா தனி தலைநகரை அறிவிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதனையடுத்து சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு அமராவதியை தலைநகராக நிர்ணயித்து பணிகளை மேற்கொண்டார். ஆனால் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த பணிகள் யாவும் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் இந்த ஆளுங்கட்சி அரசு விசாகப்பட்டினம் நிர்வாக தலைநகராகவும், அமராவதியை சட்டமன்ற தலைநகராகவும், கர்னூலை நீதித்துறையின் தலைநகராகவும் மாற்றியமைக்க திட்டமிட்டது.
அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலத்தை கொடுத்த மக்கள்
இந்த திட்டம் மூலம் 13 மாவட்டங்களும் சம நிலையில் வளர்ச்சியடைய தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னதாக அறிவித்திருந்தார். ஆனால் அமராவதியில் தலைநகர் ஏற்படுத்த நிலம் கொடுத்த அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அரசின் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர நீதிமன்றங்களில் வழக்குகளையும் தொடர்ந்தனர். இந்நிலையில் தற்போது ஆந்திராவின் தலைநகரம் விசாகப்பட்டினம் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். டெல்லியில் நடந்த சர்வதேச தூதரக கூட்டமைப்பு கூட்டத்தில் பேசுகையில் ஜெகன் மோகன் ரெட்டி இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.