விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளுக்கு தடை
விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை(செப்.,17) கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தினை சேர்ந்த பிரகாஷ் என்பவர் திருநெல்வேலி பாளையங்கோட்டையிலுள்ள தனது நிறுவனத்தில் தயாரித்த விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய கூடாது என்று காவல்துறை தடை விதித்ததாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த விசாரணையின் முடிவில், பிளாஸ்டர் ஆப் பாரீஸ் என்னும் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்படும் சிலைகளின் விற்பனைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி நீதிபதி நேற்று(செப்.,17) உத்தரவிட்டுள்ளார். இதனை எதிர்த்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மேல்முறையீடு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.
விதிகளை பின்பற்றாதது ஏன்? - நீதிபதிகள் கேள்வி
இதனை தொடர்ந்து இந்த வழக்கினை அவசர வழக்காக விசாரித்த நீதிபதிகள் பரதசக்ரவர்த்தி மற்றும் எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு, பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்பட்ட சிலைகளை விற்க தடை விதிக்க முடியாது என்னும் தனி நபர் நீதிபதியின் உத்தரவினை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், 15 ஆண்டுகளுக்கு முன்னரே நச்சு பொருட்கள் கொண்டு சிலை தயாரிக்கக்கூடாது என்று கூறப்பட்டும் அதனை மீறி செயல்படுவது ஏன்? என்றும், பிளாஸ்டர் ஆப் பாரீஸும் நச்சு பொருள் தான் என்றும் கூறியுள்ளனர். பசுமை தீர்ப்பாயம் விதித்த கட்டுப்பாடுகளின் அடிப்படையில் தான் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் விதிகளை வகுத்துள்ளது. அதனை ஏன் பின்பற்றுவதில்லை? என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.