LOADING...
விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிப்பு
விளாத்திகுளம் சிறுமி கொலை வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை தூக்கு

விளாத்திகுளம் மாணவி பாலியல் கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
May 25, 2026
02:42 pm

செய்தி முன்னோட்டம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி, கடந்த மார்ச் 10 அன்று இரவு இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது மர்மமான முறையில் காணாமல் போனார். மார்ச் 11 அன்று மாணவியின் பெற்றோர் புகார் அளிக்கச் சென்றபோது அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரவீனா புகாரைப் பெறாமல் அலட்சியமாக அலைக்கழித்து திருப்பி அனுப்பியுள்ளார். அன்றைய தினமே நண்பகலில் வேடநத்தம் காட்டுப்பகுதியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, காயங்களுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் உலுக்கியது. குற்றவாளியை உடனே கைது செய்யக்கோரி பொதுமக்கள் 12 மணி நேரத்திற்கும் மேலாகச் சாலை மறியலில் ஈடுபட்டதால், அலட்சியமாகச் செயல்பட்ட இன்ஸ்பெக்டர் பிரவீனா மார்ச் 12 அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

குற்றவாளி கைது நடவடிக்கை

காற்றாலை சிசிடிவி கேமரா மற்றும் கொலையாளி சிக்கிய பின்னணி

கொலையாளி குறித்து எவ்வித துப்பும் கிடைக்காமல் 5 நாட்கள் தனிப்படைகள் திணறிய நிலையில், அப்பகுதியில் இருந்த காற்றாலை கோபுர சிசிடிவி கேமரா காட்சிகளைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ராமநாதபுரம் சாயல்குடியைச் சேர்ந்த 37 வயது தர்ம முனீஸ்வரன் என்பவரைக் குற்றவாளியாகக் கண்டறிந்து, மார்ச் 19 அன்று போலீசார் கைது செய்தனர். மார்ச் 20 அன்று கொடூரன் தர்ம முனீஸ்வரனை வேடநத்தம் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, அவன் செய்த குற்றச் சம்பவத்தைப் போலீசார் வீடியோவாக நடித்துக் காண்பிக்கச் சொல்லிப் பதிவு செய்தனர். குற்றவாளி கைது செய்யப்பட்டதை அடுத்து 10 நாட்களாக உடலை வாங்க மறுத்த பெற்றோர் சடலத்தைப் பெற்றுத் தகனம் செய்தனர். தர்ம முனீஸ்வரன் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

போக்சோ நீதிமன்ற தீர்ப்பு

இரண்டே மாதங்களில் நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு

தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு அதிவேகமாக நடத்தப்பட்டு, அனைத்து சாட்சிகளிடமும் விசாரணை முடிக்கப்பட்டு மே 21இல் அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்தன. குற்றம் நடந்த இரண்டே மாதங்களில், இன்று (மே 25) தூத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனை வழங்கி வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பளித்தார். இந்தத் தர்ம முனீஸ்வரனுக்கு ஏற்கனவே கடந்த 2020இல் எட்டயபுரம் அருகே 65 வயது மூதாட்டியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியில் வந்தவர், நீதிமன்றத்தில் கையெழுத்திடச் சென்ற வழியில்தான் இந்த பள்ளி மாணவியையும் மிகக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளது என்பது உறுதியானது.

Advertisement