மே 9ஆம் தேதி விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் வழங்கப்படவுள்ளது
மே 9ஆம் தேதி விஜயகாந்த்-க்கு பத்மபூஷன் வழங்கப்படவுள்ளதாக உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது என்று தேமுதிக பொது செயலாளர் இன்று கோயம்பேட்டில் பேட்டியளித்துள்ளார். "விஜயகாந்த்க்கு பத்ம பூஷன் வழங்கப்படவுள்ளது, இதற்காக 3 நாட்களுக்கு முன் எனக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அழைப்பை விடுத்துள்ளது. அதனால், நானும் விஜயப்ரபாகரனும் அந்த விருதை பெற டெல்லி செல்ல உள்ளோம்." என்று என்று தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 28ஆம் தேதி நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்தார். அதன் பிறகு, ஜனவரி மாதம் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்தது.
'காலம் கடந்த விருது'
தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த் டிசம்பர் 28-2023ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இந்நிலையில், அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25ஆம் தேதி பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. பத்ம விருதுகள் பெற்ற பிரபலங்களின் பட்டியலில் மெகாஸ்டார் சிரஞ்சீவி, வைஜெயந்திமாலா, மிதுன் சக்ரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கலைத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போது இது குறித்து பேசிய அவரது மனைவியும் தேமுதிக பொது செயலாளருமான பிரேமலதா இது 'காலம் கடந்து கிடைக்கும் விருது' என்று கூறி இருந்தார்,