பிறந்தநாளை முன்னிட்டு, நாளை தொண்டர்களை சந்திக்கிறார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்
நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் நாளை தனது பிறந்தநாள் தினத்தினை முன்னிட்டு தனது தொண்டர்களை சந்திக்கவுள்ளதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர், "எனது பிறந்தநாளினை கடந்த 2006ம் ஆண்டு முதல் 'வறுமை ஒழிப்பு தினம்'மாகவே கடைபிடிக்கிறேன். அன்றைய தினத்தில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனது வழியினை பின்பற்றி ஏழை மக்களுக்கு 'இயன்றதை செய்வோம்' என்னும் கொள்கை முழக்கம் கொண்டு அவர்களால் முடிந்த நல உதவிகளை செய்து வருகிறார்கள்" என்று கூறியுள்ளார். மேலும் அவர், தனது உடல்நிலை குறித்து பரவும் வதந்திகள் எதனையும் நம்பவேண்டாம் என்றும், தான் நலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நாளை காலை 10 மணியளவில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை நேரடியாக சந்திக்கவுள்ளதாக கூறியுள்ள அவர், தன்னை சந்திக்க வருவோர் சால்வை, பூங்கோத்து, மாலை போன்ற அன்புப்பொருட்களை தவிர்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து, தமிழக ஏழை மக்களின் வறுமையினை போக்க தொடர்ந்து தேமுதிக போராடி வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மாற்றம் அடையவேண்டும் என்பதே தனது ஒரே குறிக்கோள் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழக மக்கள் தங்கள் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பினை வரவிருக்கும் நாடாளுமன்றம் தேர்தலில் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.