விஜய் மேஜிக்: டிஜிட்டல் தளங்களில் சாதனை படைக்கும் தமிழக சட்டப்பேரவை நேரலை
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முழுவதையும் முதன்முறையாக நேரலை செய்ய எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவு, மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக திரைத் துறையின் முன்னணி நட்சத்திரமாக இருந்து, சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகியுள்ள சி.ஜோசப் விஜய்யின் பிரபலம் மற்றும் இளைஞர்களின் அரசியல் ஆர்வம் காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் தொலைக்காட்சி மற்றும் யூடியூப் தளங்கள் வாயிலாக சட்டமன்ற நிகழ்வுகளைத் நேரலையில் தொடர்ந்து கண்டு வருகின்றனர்.
பார்வையாளர் எண்ணிக்கை
யூடியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் எகிறிய பார்வையாளர்கள் எண்ணிக்கை
ஆகஸ்ட் 5 அன்று தவெக நிதி அமைச்சர் மேரி வில்சன் 2026-27 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தபோது, 12 மணி நேர சட்டமன்ற நேரலை பாலிமர் செய்திகள் யூடியூப் பக்கத்தில் மட்டும் 1.2 மில்லியன் (12 லட்சம்) பார்வைகளைக் கடந்து சாதனை படைத்தது.
புதிய தலைமுறை மற்றும் தந்தி டிவி ஆகிய செய்திச் சேனல்களின் யூடியூப் பக்கங்களிலும் பல லட்சம் மக்கள் நேரலையைக் கண்டுள்ளனர்.
முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் இடைக்கால பட்ஜெட்டின் போது வெறும் 10,000 பார்வைகள் மட்டுமே பதிவான நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
விஜய் vs உதயநிதி
வைரலாகும் சட்டமன்ற விவாத வீடியோக்கள்
யூடியூப் தவிர்த்து இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் சட்டமன்ற வீடியோக்கள் தீயாகப் பரவி வருகின்றன.
முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் ஆற்றிய சினிமா பாணி பஞ்ச் வசனங்கள் அடங்கிய உரை வெளியான சில மணி நேரங்களிலேயே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது.
மேலும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக அமைச்சர்களுக்கு இடையிலான விவாதங்கள் 'விஜய் vs உதயநிதி' என்ற தலைப்பில் வைரலாகி வருகின்றன.
செய்தி நிறுவனங்கள் மற்றும் மீம் பக்கங்கள் இவற்றை குறும்படங்களாகப் பகிர்ந்து வருகின்றன.
பெண்கள்
பெண்களையும் இளைஞர்களையும் ஈர்த்த நேரலை ஒளிபரப்பு
சட்டமன்ற நேரலை நிகழ்வுகளை இளைஞர்கள் மட்டுமின்றி, பெரும்பாலான நடுத்தர வயது மற்றும் வயதான பெண்களும் தினமும் காலை 10 மணிக்குத் தொலைக்காட்சிகளில் ஆர்வத்துடன் பார்த்து வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த நேரலை நிகழ்வுகளை சமூக வலைதளங்களுக்கு ஏற்ற வடிவில் மாற்றி இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களாக வெளியிட்டு வருகின்றன.
இதனால் முன்பை விடப் பொதுமக்கள் மாநில அரசியலை மிகவும் கூர்ந்து கவனிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
எம்எல்ஏக்கள்
எம்எல்ஏக்களின் உரையாற்றல் திறனுக்கு விழுந்த சவால்
சட்டமன்ற நிகழ்வுகளை லட்சக்கணக்கான மக்கள் நேரலையில் நேரடியாகப் பார்ப்பதால், மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தங்களின் பேச்சுத் திறனை மேலும் கூர்மைப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சட்டப்பேரவை விவாதங்களுக்கு முன்பாகவே அவர்கள் தீவிரமாகத் தயார் செய்து கொண்டு அவைக்கு வரத் தொடங்கியுள்ளனர்.
தவறான தகவல்களையோ அல்லது குளறுபடிகளையோ பேசினால் மக்கள் மத்தியில் அவை மீம்ஸ்களாக மாறிவிடும் என்பதால், அனைத்து உறுப்பினர்களும் மிகவும் கவனத்துடன் விவாதங்களில் பங்கேற்று வருகின்றனர்.