வாக்காளர் கன்னத்தில் அறைந்த ஜெகன் மோகன் ரெட்டி கட்சி எம்.எல்.ஏ: பதிலுக்கு அடி விழுந்ததால் பரபரப்பு
ஆந்திரா: குண்டூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று காலை சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் வாக்காளரை அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வரிசையில் நிற்காமல் அந்த சட்டமன்ற உறுப்பினர் முந்திக்கொண்டு வாக்களிக்க சென்றிருக்கிறார். அதை தட்டிக்கேட்ட ஒருவரை அவர் கன்னத்தில் அறைந்திருக்கிறார். அதற்கு பதிலடி கொடுத்த அந்த வாக்காளர் சட்டமன்ற உறுப்பினரை அறைந்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விஐபி கலாச்சாரத்தின் இந்த வெட்கக்கேடான சம்பவம் தற்போது வைரலாக பரவி வருகிறது. தெனாலியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சிவக்குமார் ஒரு வாக்காளரை நெருங்கி அவரது முகத்தில் அறைந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அந்த வாக்காளர் எம்எல்ஏவுக்கு பதிலடி கொடுத்ததும் எம்எல்ஏவின் ஆட்கள் சேர்ந்து அந்த வாக்காளரை அடித்து துவைத்துவிட்டனர்.
வாக்காளரைக் காப்பாற்ற எந்த பாதுகாப்பு அதிகாரிகளும் முற்படவில்லை
எம்.எல்.ஏ-வின் உதவியாளர்கள் அந்த வாக்காளரை தாக்கும்போது, அங்கிருந்த மற்ற வாக்காளர்கள் சண்டையை நிறுத்த முயற்சிப்பதையும் அந்த வீடியோவில் காணலாம். ஆனால், அந்த வாக்காளரைக் காப்பாற்ற எந்த பாதுகாப்பு அதிகாரிகளும் தலையிடவில்லை மேலும் அதிர்ச்சி தரும் ஒரு தகவலாகும். இந்த சண்டைக்கு முன்பு சரியாக என்ன நடந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு வாக்காளர் மீது எம்எல்ஏ தாக்குதல் நடத்தியது சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, பாஜக மற்றும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி கூட்டணிக்கு எதிராக போட்டியிட்டு வருகிறது.