Page Loader
வேங்கைவயல் விவகாரம் - ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
வேங்கைவயல் விவகாரம் - ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் விவகாரம் - ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

எழுதியவர் Nivetha P
Apr 28, 2023
11:16 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு மாநிலம், புதுக்கோட்டையில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ம்தேதி குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், இந்த வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். அவர்கள் இதுவரை நடத்திய விசாரணையில் 147 சாட்சிகளிடம் விசாரணை மட்டுமே நடத்தியுள்ளனரே தவிர, யாரையும் கைது செய்யவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் குடிநீர் பகுப்பாய்வு, டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையினை சிபிஐ.க்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கினை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர்.

விசாரணை

மே 6ம் தேதி புதுக்கோட்டைக்கு விரைகிறார் விசாரணை ஆணைய தலைவர் 

அப்போது அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையினை மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்திய நாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர். அதன் படி அந்த விசாரணை ஆணையமானது 2 மாதங்களுக்குள் இது குறித்த அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதற்கான வசதிகளை விசாரணை ஆணையத்திற்கு தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து இந்த விசாரணை ஆணைய தலைவர் நீதிபதி சத்திய நாராயணன் அடுத்த வாரம் இந்த விவகாரம் குறித்த விசாரணையில் களமிறங்குவார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதற்காக அவர் வரும் 6ம் தேதி புதுக்கோட்டை செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.