வேங்கைவயல் விவகாரம் - உயர்நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல்
கடந்த டிசம்பர் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டியில் மனித கழிவுகள் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த வழக்கை சிபி-சிஐடி விசாரித்து வந்தது. அதன்பின்னர் இந்த வழக்கின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்று கூறி, இந்த வழக்கினை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி கடந்த மார்ச் மாதம் வழக்கறிஞர் கே.ராஜ்கமல் மற்றும் மார்க்ஸ்-ரவீந்திரன் ஆகியோர், உயர்நீதிமன்றத்தில் தனிநபர் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து, 2 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும் கூறி உத்தரவிட்டது.
வழக்கின் விசாரணை நவம்பர் மாதம் 7ம் தேதிக்கு ஒத்திவைப்பு
இந்நிலையில் தற்போது சத்தியநாராயணன் ஆணையத்தின் இடைக்கால அறிக்கையானது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சந்தேகிக்கும் 25 நபர்களிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது. 191 சாட்சிகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது, 4 பேரிடம் அடுத்த 2 வாரத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்னும் விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல் சிபிசிஐடி காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணை நிலையினை குறித்த அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே காவல்துறை நடத்திய விசாரணையானது மந்தநிலையில் இருக்கிறது என்று சத்தியநாராயணன் ஆணையம் வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. தொடர்ந்து, இவ்வழக்கின் புலன் விசாரணையில் உள்ள முன்னேற்றம் குறித்த அறிக்கையினை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி அமர்வு, இவ்வழக்கின் விசாரணையினை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த காலவரிசையைப் பகிரவும்