வரும் 10ம் தேதிக்குள் வாகன வரி உயர்வு அமலுக்கு வரும் என தகவல்
வரும் நவம்பர் 10ம் தேதிக்குள் வாகன வரி உயர்வானது அமலுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், இதுவரை இருசக்கர வாகனங்களின் விலைகளில் 8 சதவிகிதம் என்று நிர்ணயிக்க பட்டிருந்த நிலையில் தற்போது ரூ.1 லட்சம் வரையான இருசக்கர வாகனங்களுக்கு 10 சதவிகிதம், அதற்கு மேலான வாகனங்களுக்கு 12 சதவிகிதம் என வாழ்நாள் வரியானது மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் கார்களுக்கு தற்போது ரூ.10 லட்சம் மதிப்புடைய வாகனங்களுக்கு 10 சதவிகிதம். அதற்கு மேல் உள்ள காருக்கு 15 சதவிகிதம் வரி வசூலிக்கப்படுகிறது.
வாகன வரி உயர்வு குறித்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காத ஆளுநர்
இது தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.5 லட்சம் மதிப்புடைய கார்களுக்கு 12 சதவிகிதம், ரூ.5-10 லட்சம் மதிப்புள்ள கார்களுக்கு 13 சதவிகிதம், ரூ.10-ரூ.20 லட்சம் மதிப்புள்ள கார்களுக்கு 18 சதவிகிதம், ரூ.20 லட்சத்திற்கு மேலான கார்களுக்கு 20 சதவிகிதம் என வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த வாகன வரி மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னமும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனிடையே வரும் 10ம் தேதிக்குள் இதற்கான மசோதாவில் கையொப்பம் பெற்று இதனை அமலுக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், இதுகுறித்த அறிவுறுத்தல்கள் ஏற்கனவே இந்த துறை சார்ந்த அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.