திமுக கூட்டணியைக் காப்பாற்றத் தவறிவிட்டது: திண்டிவனம் மாநாட்டில் விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேச்சு
செய்தி முன்னோட்டம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வண்டிமேடு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் கலந்துகொண்டு பேசிய கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. பொதுக்கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியின் தற்போதைய அரசியல் போக்கு குறித்து வெளிப்படையாகப் பேசினார். "காலம் மாறிவரும்போது கூட்டணியைத் தக்கவைக்கும் முயற்சியை திமுக மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியையும், மற்ற கூட்டணிக் கட்சிகளையும் திமுக தக்க வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் ஆட்சிக்கு வந்திருக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
கருத்து
திமுக கூட்டணியும் தேர்தல் அரசியல் குறித்தும் திருமாவளவன் கருத்து
"ஆண்ட கட்சி இரண்டாவது இடத்தை அடைந்ததை இப்போது பெருமையாகப் பேசுகிறது. 35 மதிப்பெண்கள் எடுத்தால்தான் பாஸ், 34 எடுத்தால் எப்படி பாஸ் ஆக முடியும்? ஆட்சி தேவையில்லை என்றால் இரண்டாம் இடத்திலேயே இருந்திருக்கலாம்" என்று விமரிசித்தார்.
"சின்ன கட்சி, பெரிய கட்சி என்பதில்லை; வெற்றிதான் முக்கியம். விசிகவிற்கு ஒரு சதவீதம் செல்வாக்கு இருப்பதாக வைத்துக்கொண்டாலும், ஆட்சி அமைக்க அந்த ஒரு சதவீதம் தேவை என்றால் விசிகவும் அவசியம்தானே" என்று கேள்வியெழுப்பினார்.
அமைச்சரவை
அமைச்சரவை மற்றும் கொள்கைப் பிரகடனம்
தொடர்ந்து பேசிய அவர், கொள்கைக் கோட்பாடுகளில் உறுதியாக இருந்ததால்தான் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளோம் எனவும், தமிழ் தேசியத்தை மதச்சார்பற்ற மொழிவழி தேசியமாக விசிக முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பிற இன, மொழி வெறுப்பு இல்லாமல் தமிழ் உரிமை, இன உரிமை மற்றும் மாநில உரிமைகளுக்காகவே விசிக குரல் கொடுப்பதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சமூக நீதித்துறை அமைச்சரும் விசிகவின் துணைப் பொதுச்செயலாளருமான வன்னி அரசு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
அமைச்சரவைப் பதவியை விட கட்சியும் அதன் கொள்கைகளும்தான் முக்கியம் என வன்னி அரசு தனது உரையில் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.