Loading...
சென்னை வண்டலூர் பூங்காவில் பறவை காய்ச்சல் உறுதி: மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை
பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவக்கூடும்

சென்னை வண்டலூர் பூங்காவில் பறவை காய்ச்சல் உறுதி: மனிதர்களுக்கு பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Oct 23, 2026
12:01 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள பறவைகளுக்கு 'பறவைக் காய்ச்சல்' உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பூங்கா இரண்டு நாட்களுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும், இந்த வகை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து, மாநிலம் முழுவதிலும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா என்பதை கால்நடைத்துறையுடன் இணைந்து தீவிரமாக ஆய்வு செய்ய மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் சென்னையிலும், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களிலும் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டு பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது டெங்கு மற்றும் சாதாரண வைரஸ் காய்ச்சல்களுடன் பறவைக் காய்ச்சலும் பரவ வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

வழிகாட்டுதல்கள்

பொதுமக்களுக்கான மக்கள் நல்வாழ்வுத்துறையின் வழிகாட்டுதல்கள்

நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த பறவைகளை எக்காரணம் கொண்டும் வெறும் கைகளில் எடுக்கக் கூடாது.

இறந்து கிடக்கும் பறவைகளை பிளாஸ்டிக் கவர் அல்லது துணி கொண்டு பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.

அதன் பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும்.

கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்றாக வேக வைத்துச் சாப்பிட வேண்டும்; இதில் எந்தவித அலட்சியமும் காட்ட வேண்டாம்.

அதிக காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை புண், உடல் சோர்வு, தசை வலி, மூட்டு வலி மற்றும் மூச்சுத் திணறல் அல்லது சுவாசப் பிரச்சனைகள் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற்று உரிய மருந்துகளை உட்கொள்வது அவசியமாகும்.

ADVERTISEMENT