பீகாரில் தாய்ப்பாலில் யுரேனியம் கண்டுபிடிப்பு: 70% குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு என ஆய்வில் கண்டுபிடிப்பு
செய்தி முன்னோட்டம்
பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலில் யுரேனியம் (U-238) என்ற கதிரியக்கத் தனிமம் அபாயகரமான அளவில் இருப்பது சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது 70% குழந்தைகளுக்குப் புற்றுநோய் அல்லாத (Non-carcinogenic) சுகாதாரப் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். பாட்னாவில் உள்ள மகாவீர் புற்றுநோய் சன்ஸ்தான் மற்றும் புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் (AIIMS) நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர். பீகாரின் பல மாவட்டங்களில் உள்ள 40 தாய்மார்களின் தாய்ப்பால் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில், அனைத்து மாதிரிகளிலும் யுரேனியம் (0 முதல் 5.25 g/L வரை) கண்டறியப்பட்டது. இதில், கடிஹார் மாவட்டத்தில் அதிகபட்ச யுரேனியம் அளவுப் பதிவாகியுள்ளது.
குழந்தைகள்
70 சதவீத குழந்தைகளுக்கு பாதிப்பு
குழந்தைகளின் உடலால் யுரேனியத்தை வெளியேற்றும் திறன் குறைவாக இருப்பதால், அவர்கள் மிகவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 70% குழந்தைகளுக்குச் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நீண்ட காலம் இது இருந்தால், சிறுநீரக வளர்ச்சிப் பாதிப்பு, நரம்பியல் குறைபாடுகள் மற்றும் குறைந்த IQ (அறிவுக் கூர்மை) போன்ற அபாயங்கள் ஏற்படலாம். இந்த ஆய்வு யுரேனியத்தின் அபாயங்களைச் சுட்டிக்காட்டினாலும், ஒட்டுமொத்த யுரேனியம் அளவுகள் அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குக் கீழேயே இருப்பதால், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு உண்மையான சுகாதாரத் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவர் அசோக் ஷர்மா தெரிவித்துள்ளார். தாய்ப்பால் கொடுப்பதைத் திடீரென நிறுத்தக்கூடாது என்றும், மருத்துவ ரீதியாகத் தேவைப்பட்டால் மட்டுமே நிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.