LOADING...
தலைக்கவசம் அணியாதவருக்கு ₹21 லட்சம் அபராதம்; ஷாக் கொடுத்த போக்குவரத்து காவல்துறை; பின்னணி என்ன?
தலைக்கவசம் அணியாதவருக்கு ரூ.21 லட்சம் அபராதம்; ஷாக் கொடுத்த போக்குவரத்து காவல்துறை

தலைக்கவசம் அணியாதவருக்கு ₹21 லட்சம் அபராதம்; ஷாக் கொடுத்த போக்குவரத்து காவல்துறை; பின்னணி என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 08, 2025
05:58 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகரில், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டிய ஒருவருக்கு ₹21 லட்சத்துக்கும் அதிகமான தொகைக்கு அபராதம் விதிக்கப்பட்டதைக் கண்டு அந்த ஸ்கூட்டர் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார். அவர் ஓட்டிச் சென்ற வாகனத்தின் மதிப்பே ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே என்ற நிலையில், ₹20,74,000 அபராதம் விதிக்கப்பட்ட ரசீது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. இந்தச் சம்பவம் முசாபர்நகரின் புதிய மண்டி பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 4) அன்று நடந்ததாகக் கூறப்படுகிறது. அன்மோல் சிங்கால் என்பவரைப் போக்குவரத்துச் சோதனை நடவடிக்கையின் போது காவல்துறை நிறுத்தியது. அவர் தலைக்கவசம் அணியாமலும், வாகனத்தின் ஆவணங்கள் இல்லாமலும் இருந்துள்ளார்.

காவல்துறை

காவல்துறை நடவடிக்கை

இதையடுத்து, காவல்துறையினர் அவரது வாகனத்தை பறிமுதல் செய்து, ₹20,74,000 அபராதத்திற்கான ரசீதை வழங்கினர். அபராதத் தொகையைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், ரசீதைச் சமூக ஊடகங்களில் பதிவிட்டதையடுத்து, இந்தத் தவறு குறித்துக் காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டனர். முசாபர்நகர் போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் அதுல் சௌபே, அபராதம் விதித்த உதவி ஆய்வாளர் செய்த தவறு காரணமாகவே இந்த குளறுபடி நிகழ்ந்ததாகத் தெரிவித்தார். மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 207இன் கீழ் அபராதம் விதிக்கப்பட்ட போது, அந்தப் பிரிவின் பெயரைக் குறிப்பிடாமல் தவறவிட்டதால், பிரிவு எண் 207உம், குறைந்தபட்ச அபராதத் தொகையான ₹4,000உம் இணைந்து 20,74,000 என்று ஒரே எண்ணாக மாறிவிட்டது என்று அவர் விளக்கினார். ஓட்டுநர் ₹4,000 அபராதம் செலுத்தினால் போதும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.