தங்கையின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல்துறையில் சரணடைந்த அண்ணன்
உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில், தனது சகோதரியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த இளைஞர் ஒருவர் நேற்று(ஜூலை 21) கைது செய்யப்பட்டார். பாரபங்கியில் உள்ள ஃபதேபூர் பகுதியை சேர்நத மித்வாரா கிராமத்தில் ரியாஸ்(22) மற்றும் அவரது தங்கை ஆஷிஃபா (18) ஆகியோர் வசித்து வந்தனர். சமீபத்தில், ஆஷிஃபா அதே கிராமத்தில் வசிக்கும் தனது காதலரான சந்த் பாபுவுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதை எதிர்த்து ஆஷிஃபாவின் குடும்பத்து பெண்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் ஆஷிஃபாவை மீட்டு வந்த போலீஸார், சந்த் பாபுவை சிறையில் அடைத்தனர்.
வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டார்
ஆஷிஃபாவின் மூத்த சகோதரரான ரியாஸுக்கு தன் தங்கை காதலிப்பது பிடிக்கவில்லை. அதனால், அவர் அடிக்கடி ஆஷிஃபாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்று வாக்குவாதம் முற்றி போகவே, கடுமையான கோபத்தில் இருந்த ரியாஸ் ஆஷிஃபாவின் கழுத்தை ஒரு கூர்மையான ஆயுதத்தால் அறுத்து கொன்றார். அதன் பிறகு, ஆஷிஃபாவின் துண்டிக்கப்பட்ட தலையை கையில் வைத்துக் கொண்டு அவர் காவல்நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, போலீஸார் அவரைக் கைது செய்தனர் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசுதோஷ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும், வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசுதோஷ் மிஸ்ரா கூறியுள்ளார்.