மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக உத்திரபிரதேச மருத்துவர் பிரசாந்த் லாவனியா நியமனம்
கடந்த 2015ம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி, 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. 2019ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 200 ஏக்கர் நிலத்தினை அப்போதைய அதிமுக அரசு அளித்தது என்று கூறப்படுகிறது. மதுரையில் இந்த மருத்துவமனையை விரைவில் கட்டிமுடிக்க தமிழக முதல்வர் தொடர்ந்து பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணிகள் இன்னமும் துவங்காத காரணத்தினால் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான வகுப்புகள் நடந்து வருகிறது.
சரோஜினி நாயுடு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்
இந்நிலையில், மதுரையில் உள்ள வி.என்.நரம்பியல் சிறப்பு மருத்துவமனை தலைவரான நாகராஜனை, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தலைவராக நியமித்து கடந்த அக்டோபர் மாதம் மத்திய சுகாதாரத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவர் கடந்த ஜனவரி மாதம் உடல்நல குறைவால் காலமானார். இதனையடுத்து புதிய தலைவருக்கான அறிவிப்பு இன்று(பிப்.,27) வெளியாகியுள்ளது. அதன் படி, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவர் பிரசாந்த் லவானியா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இவர் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சரோஜினி நாயுடு மருத்துவ கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.