11 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்வு! மத்திய அமைச்சர்களின் பங்களா பராமரிப்பிற்கு ₹92.35 கோடி செலவு; ஆர்டிஐயில் தகவல்
செய்தி முன்னோட்டம்
புதுடெல்லியில் உள்ள மத்திய அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ பங்களாக்களைப் பராமரிக்கவும், புதுப்பிக்கவும், அத்தியாவசிய பொருட்களைப் பொருத்துவதற்கும் 2025-26 ஆம் நிதியாண்டில் மட்டும் ₹92.35 கோடி செலவிடப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட அதிகாரப்பூர்வத் தகவல்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில் செலவிடப்பட்ட ₹27.47 கோடியுடன் ஒப்பிடும் போது, இந்த செலவினம் கடந்த 11 ஆண்டுகளில் மூன்று மடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காரணங்கள்
பழமையான பங்களாக்கள் மற்றும் பொதுப்பணித்துறை வெளியிட்ட காரணங்கள்
மத்திய அமைச்சர்களின் வீடுகளைப் பராமரிக்கும் பணிகளை மத்திய பொதுப்பணித் துறை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 2014-15 முதல் 2025-26 வரையிலான காலக்கட்டத்தில் அமைச்சர்களின் வீடுகளைப் பராமரிக்க மொத்தம் ₹547.68 கோடி செலவிடப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள இந்த பங்களாக்கள் சுமார் 80 முதல் 100 ஆண்டுகள் வரை பழமையானவை.
சுவர்களில் ஏற்படும் நீர் கசிவு, கரையான் பாதிப்பு, பழமையான மின்சார இணைப்புகள் மற்றும் கழிவுநீர் அமைப்புகளில் ஏற்படும் கோளாறுகள் போன்ற காரணங்களாலேயே பராமரிப்பு செலவு ஆண்டுக்காண்டு உயர்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
வரலாறு
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பங்களாக்களின் வரலாறு
டெல்லியின் லுடியன்ஸ் பங்களா பகுதி 1912 முதல் 1930 வரையிலான காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்த பங்களாக்கள் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், நீதிபதிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டன.
தற்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா தங்கியிருக்கும் கிருஷ்ண மேனன் மார்க் பங்களாவில் தான், பழைய நாடாளுமன்ற கட்டிடத்தை வடிவமைத்த கட்டிடக் கலைஞர் ஹெர்பர்ட் பேக்கர் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டு சராசரி செலவு
ஆண்டிற்கு சராசரியாக ஒரு அமைச்சருக்கு ₹1.2 கோடி செலவு
தற்போது மத்திய அமைச்சரவையில் சுமார் 70 முதல் 72 அமைச்சர்கள் வரை உள்ளனர்.
இதன்படி கணக்கிட்டால், கடந்த நிதியாண்டில் மட்டும் ஒரு அமைச்சரின் வீட்டைப் பராமரிக்கச் சராசரியாக ₹1.2 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது.
மின்விசிறிகள், எல்இடி விளக்குகள் போன்ற மின்சாதனங்களை மாற்றுதல், பழுதுபார்க்கும் குழாய் வேலைகள் மற்றும் தரைக் கற்களை மாற்றுதல் போன்ற பணிகளுக்காகவே அதிகப்படியான கோரிக்கைகள் மற்றும் செலவினங்கள் ஏற்படுவதாக அமைச்சர்களின் அலுவலக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.