பானி-பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனத்தைக் கண்டறிந்துள்ளது கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறை
உணவு பிரியர்கள் மத்தியில் பானி-பூரிக்கு ஒரு தனி மவுசு இருந்து வரும் நிலையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கர்நாடகாவில் பானி பூரி மாதிரிகளை சோதனை செய்ததில் அதிர்ச்சிகரமான தகவல்களை கண்டறிந்துள்ளனர். உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சேகரித்த பானி பூரி மாதிரிகள், 22% பாதுகாப்பு தரத்தை மீறியது தெரியவந்துள்ளது. அறிக்கைகளின்படி, சேகரிக்கப்பட்ட 260 மாதிரிகளுள், 41 மாதிரிகளில், செயற்கை நிறங்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் புற்றுநோய் காரணிகள் கண்டறியப்பட்டன. அதில் இருந்த மேலும் 18 மாதிரிகள் மனித நுகர்வுக்கு தகுதியற்றவை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
மனித நுகர்வுக்கு தகுதியற்ற பானி பூரிகள்
"மாநிலம் முழுவதும் தெருக்களில் வழங்கப்படும் பானி பூரியின் தரம் குறித்து எங்களுக்கு பல புகார்கள் வந்துள்ளன. சாலையோரக் கடைகளில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள கண்ணியமான உணவகங்கள் வரை அனைத்து இடங்களில் இருந்தும் பானி-பூரி மாதிரிகளை நாங்கள் சேகரித்தோம். பல மாதிரிகள் கெட்டு போன நிலையிலும், மனித நுகர்வுக்கு தகுதியற்ற நிலையிலும் காணப்பட்டன." என்று உணவு பாதுகாப்பு ஆணையர் ஸ்ரீனிவாஸ் கே தெரிவித்துள்ளார். நீலம், மஞ்சள் மற்றும் டார்ட்ராசின் போன்ற உணவு நிற இரசாயனங்கள் பானி பூரி மாதிரிகளில் காணப்பட்டன. அவை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.