
உத்தரகாண்டில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து: சிக்கிக்கொண்ட 40 தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்
செய்தி முன்னோட்டம்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்த சுரங்கப்பாதை ஒன்று நேற்று இரவு இடிந்து விழுந்ததால் குறைந்தது 36 தொழிலாளர்கள் அந்த சுரங்கப்பாதையில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு(NDRF & SDRF) குழுக்கள் மற்றும் காவல்துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சில்க்யாரா மற்றும் தண்டல்கானை இணைக்கும் சுரங்கப்பாதையில் இந்த விபத்து நிகழ்ந்தது.
சம்பவம் குறித்து அறிந்ததில் இருந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
கஜவாப்
சிக்கியுள்ளவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை
"NDRF மற்றும் SDRF ஆகியவை சம்பவ இடத்தில் உள்ளன. அனைவரும் பாதுகாப்பாக திரும்ப கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம்," என்று முதல்வர் தாமி கூறியுள்ளார்.
இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க துளையிடும் இயந்திரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், யாரும் மூச்சு திணறி உயிரிழந்துவிடாமல் இருக்க ஆக்ஸிஜன் குழாய்களும் உள்ளே அனுப்பப்பட்டுள்ளன.
எனினும், உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியேற்ற 2-3 நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது வரை சிக்கியுள்ளவர்களின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மீட்பு பணிகளும் நிவாரண பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடந்துகொண்டிருக்கின்றன.