மாணவர்களுக்கு இதில் தாமதம் கூடாது: உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்
செய்தி முன்னோட்டம்
உயர்கல்வி நிறுவனங்களில் தேர்வுகள் நடத்துவதிலும், மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்குவதிலும் ஏற்படும் தாமதங்கள் குறித்துப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கடும் கவலை தெரிவித்துள்ளது. இத்தகைய தாமதங்கள் மாணவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளைப் பாதிப்பதாகக் கூறி, விதிகளைச் சரியாகப் பின்பற்றுமாறு யுஜிசி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. "சில உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வுகளைச் சரியான நேரத்தில் நடத்தாமல் அல்லது பட்டங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுத்துகின்றன. இந்தத் தாமதம் மாணவர்களின் தகுதியான வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கும், மேலும் கல்வி வாய்ப்புகளைத் தொடர்வதற்கும் தடையாக உள்ளது." என்று யுஜிசி தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
விதிகள்
யுஜிசி விதிகள்
யுஜிசி (பட்டங்கள் மற்றும் பிற விருதுகளை வழங்குதல்) விதிமுறைகள், 2008இன் பிரிவு 4.4இன் படி, ஒரு மாணவர் பட்டம் பெறத் தகுதியுள்ள நாள் முதல் 180 நாட்களுக்குள் பல்கலைக்கழகங்கள் பட்டங்களை வழங்க வேண்டும் என்று யுஜிசி சுட்டிக் காட்டியுள்ளது. அதேபோல், நிறுவனங்களின் கல்வி அட்டவணைப்படி தேர்வுகளும் முடிவுகளும் சரியான நேரத்தில் அறிவிக்கப்பட வேண்டும். விதிகளுக்குக் கட்டுப்படாமல் தாமதம் செய்யும் நிறுவனங்கள் மீது தண்டனை நடவடிக்கைகள் எடுக்க யுஜிசிக்கு அதிகாரம் உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, உயர்கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி, மாணவர்கள் கல்வி ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பாதிக்கப்படாத வகையில் சரியான நேரத்தில் தேர்வுகளை நடத்தி, பட்டங்களை வழங்க வேண்டும் என்று யுஜிசி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.