புதிய யுஜிசி விதிகளுக்கு எதிர்ப்பு: பிப்ரவரி 1 இல் பாரத் பந்த்; லக்னோவில் வெடித்த போராட்டம்
செய்தி முன்னோட்டம்
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கொண்டு வந்துள்ள 'ஒழுங்குமுறைகள் 2026' என்ற புதிய சமத்துவ விதிகளுக்கு எதிராக உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த விதிகளைத் திரும்பப் பெறக் கோரி வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் திரண்ட மாணவர்கள், புதிய யுஜிசி விதிகள் மாணவர்களிடையே பாகுபாட்டை உருவாக்குவதாகக் குற்றம் சாட்டினர். கல்வி வளாகங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதாகக் கூறிக்கொண்டு, இந்த விதிகள் மாணவர்களை ஜாதி அடிப்படையில் பிரிக்கின்றன என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
உள்நோக்கம்
அரசியல் உள்நோக்கம்
சத்ர பஞ்சாயத்து அமைப்பின் தலைவர் சிவம் பாண்டே, இதை ஒரு கருப்புச் சட்டம் என்று விமர்சித்துள்ளார். மாணவர்கள் ஜாதி பார்க்காமல் ஒன்றாகப் படித்து வரும் சூழலில், இந்தச் சட்டம் அரசியல் உள்நோக்கத்துடன் மாணவர்களைப் பிரிக்க முயல்கிறது என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில், பிப்ரவரி 1இல் நடைபெறவுள்ள பாரத் பந்தில் கர்ணி சேனா, சவர்ண ஆர்மி மற்றும் பல்வேறு பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. புதிய விதிகளில் பொதுப்பிரிவு மாணவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு மட்டுமே குறைதீர்ப்பு நடைமுறைகள் உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். கௌசாம்பி பகுதியில் ஒரு மாணவர் தனது ரத்தத்தால் பிரதமருக்குக் கடிதம் எழுதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விளக்கம்
மத்திய அரசின் பதில்
மத்திய கல்வி அமைச்சகம் இது குறித்து ஒரு விளக்கத்தை விரைவில் வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மாணவர்களிடையே நிலவும் தவறான புரிதல்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அனைத்துப் பிரிவு மாணவர்களின் நலன்களையும் பாதுகாக்க அரசு உறுதியுடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், பிப்ரவரி 1 பந்த் அழைப்பால் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் யுஜியின் புதிய விதிமுறைகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து, மத்திய அரசு மற்றும் யுஜிசி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.