"உதயநிதி ஸ்டாலினின் சனாதன பேச்சு வெறுப்புப் பேச்சே": சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமான கருத்து
செய்தி முன்னோட்டம்
கடந்த 2023-ஆம் ஆண்டு சனாதன தர்மத்தை மலேரியா, டெங்கு போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு, அதனை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசிய விவகாரம் மீண்டும் சட்டரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி, உதயநிதியின் பேச்சு "வெறுப்புப் பேச்சு" என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் அவரின் வெறுப்புப் பேச்சுக்காக அவருக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும், மற்ற மாநிலங்களில் சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், ஜனவரி 2025-இல், 'சனாதன தர்மம்' கருத்துக்கள் தொடர்பாக உதயநிதிக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரிய மூன்று ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது.
கருத்து
தனி நீதிபதியின் கருத்து உதயநிதியை கடுமையாக விமர்சிக்கிறது
இந்தியா டுடே வெளியிட்ட செய்தியில், நீதிபதி, "சனாதன ஒழிப்பு என்ற சொல்லாடல், அந்தத் தர்மத்தைப் பின்பற்றும் மக்களை ஒழிப்பதைக் குறிக்கும் 'இனப்படுகொலைக்கு' (Genocide) சமமானது. ஒரு மதத்தையே ஒழிக்க வேண்டும் என்று கூறுவது 'மதப்படுகொலை' (Religicide) ஆகும்" என தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும்,"இது போன்ற வெறுப்புப் பேச்சுகளைப் பேசுபவர்கள் தப்பித்து விடுகிறார்கள், ஆனால் அதற்கு எதிர்வினை ஆற்றுபவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்குகிறார்கள் என்பது வேதனையளிக்கிறது" என்று குறிப்பிட்டார். மேலும், "கடந்த 100 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகள் இந்து மதத்திற்கு எதிராகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியே இந்த சனாதன ஒழிப்புப் பேச்சு" என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
கேள்வி
"வெறுப்பு பேச்சை தொடங்கியவர்களை விட்டு, கண்டனம் தெரிவித்தவர்கள் மீது பாயும் சட்டம்"
"வெறுப்புப் பேச்சைத் தொடங்குபவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள், அதே நேரத்தில் அத்தகைய வெறுப்புப் பேச்சுக்கு எதிர்வினையாற்றுபவர்கள் சட்டத்தின் கோபத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்த நீதிமன்றம் வேதனையுடன் பதிவு செய்கிறது". "வெறுப்புப் பேச்சைத் தொடங்கிய நபர்களுக்கு எதிராகச் சட்டத்தை இயற்றாமல், எதிர்வினையாற்றுபவர்களை நீதிமன்றங்கள் விசாரிக்கின்றன" என்று நீதிபதி தெரிவித்தார். முன்னதாக சனாதன தர்மம் குறித்து உதயநிதி பேசியது தொடர்பாக நாடு முழுவதும் சர்ச்சை எழுந்த நிலையில், உதயநிதி தனது கருத்துக்களை ஆதரித்து, அவற்றை 'உறுதியாகக் கடைப்பிடிப்பதாகக்' கூறினார். அதே நேரத்தில் தனது கருத்துக்கள் சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப்படுகொலை செய்வதற்கான அழைப்பு அல்ல என்பதை தெளிவுபடுத்தினார். மாறாக இந்த கொள்கையால் ஒடுக்கப்படும் மக்களுக்காக எழுப்பப்பட்ட குரல் என்று வாதிட்டார்.