கனமழை எதிரொலி - தென்மாவட்டங்களுக்கு விரையும் உதயநிதி ஸ்டாலின்
தெற்கு இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 தென்மாவட்டங்களில் இடைவிடாமல் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இம்மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகளில் தேசிய, மாநில-மாவட்ட பேரிடர் மீட்புப்பணியினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே இன்று(டிச.,18)கோவையில் 'மக்களுடன் முதல்வர்' என்னும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கிவைத்தார். தொடர்ந்து சேலத்தில் இத்திட்டத்தினை அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தனர். இந்நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
மீட்பு பணிகளை ஆய்வு செய்ய செல்வதாக தகவல்
அப்போது,"இத்திட்டத்திற்காக கடந்த 16 நாட்களாக சேலத்தில் 142 இடங்கள் தேர்வுச்செய்யப்பட்டு முகாம்கள் நடத்தப்பட்டன. பொதுமக்களின் தேவைகளை பூர்த்திச்செய்ய சிறப்பு அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்"என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் மக்கள் தங்கள் தேவைக்காக அதிகம் கோரிக்கை வைக்கும் 13-துறைகள் தேர்வுச்செய்யப்பட்டு, ஒரேயிடத்தில் பல்வேறு துறைரீதியான கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படவுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், 'இந்த 13-துறைகளில் உதவிகளை பெறுவதற்கான ஹெல்ப் டெஸ்க் அமைக்கப்பட்டுள்ளது' என்று கூறிய அவர், 'இணையம் மூலமும் மக்கள் உதவிகளை பெறலாம்'என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து திருநெல்வேலியில் பெய்யும் கனமழை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'தற்போது அங்கு தான் செல்கிறேன்' என்று பதிலளித்துள்ளார். முதல்வர் கொடுத்த அறிவுறுத்தல்படி, அங்கு நடக்கும் மீட்புப்பணிகளை ஆய்வுச்செய்ய உதயநிதி ஸ்டாலின் நேரில் செல்கிறார்.