ஹைதராபாத்தில் புதிய தூதரகத்தை திறக்க இருக்கிறது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
விசாக்களுக்கான நீண்டகால கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத்துறையில் வணிக உறவுகளை மேம்படுத்துவதற்கும் அடுத்த மாதம் ஹைதராபாத்தில் நான்காவது தூதரகத்தை அதிகாரப்பூர்வமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) திறக்க உள்ளது. இதை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அஹ்மத் அலி அல் சயேக் ஜூன் 14ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள தூதரகத்தை திறப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைக்கும் நான்காவது தூதரகம் இதுவாகும். தற்போது புது டெல்லி, திருவனந்தபுரம் மற்றும் மும்பையில் தலா ஒரு தூதரகம் உள்ளது.
புதிய தூதரகம் ஒரு நாளைக்கு 300 விசாக்களை வழங்கும்
"ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு செல்ல விரும்பும் மக்களின் கோரிக்கை அதிகரித்து வருவதால் நாங்கள் ஹைதராபாத்தில் ஒரு தூதரகத்தை திறக்கிறோம்" என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தூதர் ஜெனரல் ஆரேஃப் அல்னுஐமி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். "அதை தவிர, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்களும் ஹைதராபாத்திற்கு பல காரணங்களுக்காக வருகிறார்கள். அதனால்தான் ஹைதராபாத்தில் ஒரு தூதரகம் திறப்பது நல்லது என்று எங்கள் அரசாங்கம் நினைத்தது," என்றும் அவர் கூறியுள்ளார். புதிய தூதரகம் ஒரு நாளைக்கு குடியுரிமை விசாக்கள் உட்பட சுமார் 300 விசாக்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்படிப்புகள், மருத்துவ உதவிகள் உட்பட பல காரணங்களுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்கள் ஹைதராபாத்திற்கு வருகிறார்கள் என்று மேலும் அவர் கூறியுள்ளார்.