வடமாநில வாலிபரை தாக்கிய 2 பேர் மாமல்லபுரம் அருகே கைது
பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் நூர்ஆலம். 20 வயதாகும் இவர் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி வேலை செய்துவருகிறார். இதனையடுத்து இவர் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையருகே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு வந்துள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 பேர் பூஞ்சேரி கூட்ரோடு பகுதியில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிள் நூர் ஆலம் மீது மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் வண்டியை நிறுத்திவிட்டு வந்த அவர்கள் மூவரும் ஆரன் அழுத்தினால் ஒதுங்கி செல்ல தெரியாத என்று கூறி, நூர் ஆலமை பலமாக தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்கள்.
தாக்குதல் நடத்தியவர்கள் மீது புகார் அளித்த வடமாநில வாலிபர்
இதுகுறித்து நூர் ஆலம் மாமல்லபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவர்களை தேடிவந்த நிலையில், சந்தேகத்தின்பேரில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது அவர்களுள் ஒருவர் தப்பியோடியுள்ளார். மற்ற இருவரிடமும் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார்கள். அதனால் அவர்களை போலீஸார் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளார்கள். அதில் அவர்கள் பூஞ்சேரியை சேர்ந்த திவாகர்(20) மற்றும் வாயலூர் அழகேசன் நகரை சேர்ந்த ஜேம்ஸ்(29) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள்தான் அந்த பீகார் மாநில வாலிபரை தாக்கியுள்ளார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. இதனைதொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.