திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் திமுக கொடி கட்டிய காரில் போதைப்பொருட்களை கடத்திய வடமாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவையாறு பகுதிக்கு குட்கா-பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்ய கொண்டுவருவதாக நடுக்காவேரி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அவர்கள் வாகனச்சோதனையினை தீவிரப்படுத்தியுள்ளனர். அதன்படி மனத்திடல் என்னும் பகுதியில் நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது ஃபார்ச்சுனர் கார் ஒன்று திமுக கட்சி கொடி கட்டியப்படி வந்துள்ளது. அந்த வாகனத்தினை சோதனையிட காவல்துறை வண்டியை நிறுத்தியுள்ளது. அதிலிருந்த 2 பேரும் வடமாநிலத்தினை சேர்ந்தவர்களாக இருந்தநிலையில் காவல்துறைக்கு சந்தேகம் வலுத்துள்ளது. அதனைத்தொடர்ந்து, காவல்துறை நடத்திய சோதனையில் அந்த காரின் சீட்டுக்கு அடியில் 700 கிலோ எடைகொண்ட ஹான்ஸ் மற்றும் பான்மசாலா பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட இருவரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தகவல்
அந்த போதைப்பொருள்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், காரில் இருந்த 2 வடமாநில இளைஞர்களையும் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர்கள் இருவரும் ராஜஸ்தான் மாநிலம் ஜிண்பூர் தாலுகாவை சேர்ந்த வஸ்னாராம்(28), மற்றும் சிம்பா ராம்(25) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் எந்த மாநிலத்திற்கு போதைப்பொருட்களை கடத்தல் செய்தாலும் அம்மாநில ஆளுங்கட்சி கொடியினை வண்டியில் உபயோகிப்பதை வழக்கமாக வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனாலும் இந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மன்னார்குடியை சேர்ந்த திமுக பிரமுகருக்கு சொந்தமானது என்று கூறப்படும் நிலையில், அது யார்?என்னும் கோணத்தில் தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.