விஜய் போட்டியிடும் தொகுதி இதுதான்? தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்; நிர்வாகிகள் போட்ட அதிரடி பிளான்
செய்தி முன்னோட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் சென்னையின் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கட்சி வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று (பிப்ரவரி 22) பெரம்பூர் தொகுதியில் தவெக நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தித் தேர்தல் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், விஜய் பெரம்பூரில் போட்டியிடுவதை உறுதிப்படுத்தும் வகையில் உரையாற்றினர்.
பிடித்த தொகுதி
தலைவருக்குப் பிடித்த தொகுதி - மாவட்ட செயலாளர் சிவா
பெரம்பூர் தொகுதியின் மாவட்ட செயலாளர் சிவா பேசுகையில், தவெக தலைவர் விஜய்க்கு மிகவும் பிடித்தமான தொகுதியாகப் பெரம்பூரை மாற்றியுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 44,000 பேரைத் தொகுதிக்குள் உறுப்பினர்களாகச் சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இன்னும் 35 நாட்களே உள்ள நிலையில், தூங்காமல் உழைத்து தளபதியை (விஜய்) வெற்றி பெறச் செய்து முதல்வராக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு உற்சாகம் ஊட்டினார்.
விஎஸ் பாபு
விஎஸ் பாபுவின் அதிரடிப் பேச்சு
அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் வி.எஸ். பாபு, பெரம்பூர் தொகுதியின் முக்கியத்துவம் குறித்துப் பேசினார். "தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கப் போகும் தொகுதி பெரம்பூர்தான். இங்கிருந்துதான் அடுத்த முதல்வர் வரப்போகிறார்" என்று அவர் அதிரடியாகக் கூறினார். திமுக மற்றும் அதிமுகவில் நீண்ட காலம் உழைத்தாலும் பதவி கிடைப்பது கடினம், ஆனால் தவெகவில் ஒரு ஆட்டோ ஓட்டுநர் கூட மாவட்டச் செயலாளர் ஆக முடியும் என்று கட்சிக் கட்டமைப்பைப் பாராட்டினார். திரு.வி.க நகர், துறைமுகம் மற்றும் பெரம்பூர் ஆகிய தொகுதிகள் தவெக வசமாகும் என்றும், தலைவர் விஜய் சில முறை பிரச்சாரத்திற்கு வந்தால் போதும் என்றும் அவர் தெரிவித்தார்.
தீர்மானம்
ஆதவ் அர்ஜுனா தீர்மானம்
கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, கொளத்தூர், ஆர்கே நகர் என வட சென்னையின் ஒரு தொகுதியில் நிற்பதுதான் தலைவரின் விருப்பமாக இருக்கும் என்றும், தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் நிற்க வேண்டுமென தான் தீர்மானம் போடுவதாகவும் கூறினார். இதன் பின்னர் பேசிய என்.ஆனந்த், ஆதவ் முன்வைத்த தீர்மானத்தை ஏற்பதாகவும், அவருடைய விருப்பத்தை விஜயிடம் தெரிவிப்பதாகவும் கூறினார். இதற்கிடையே, செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன், பெரம்பூர் தொகுதியில் விஜயை எதிர்த்துப் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார். விஜயின் அரசியல் வருகை தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பெரம்பூர் தொகுதியில் தவெகவின் இந்தத் தீவிர தேர்தல் வேலைகள் அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.